சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. அந்த வகையில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க எம்.பி கனிமொழி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை திமுக அமைத்துள்ளது.
இரண்டாவதாக தேர்தலுக்கான கட்சி பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழுவின் தலைவராக எம்.பி டி.ஆர் பாலுவும், குழு உறுப்பினர்களாக கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு அறிக்கை தயாரிக்கும் குழுவினரின் சுற்றுபயணம் குறித்து திமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி நேற்று (23.01.2024) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி. ராஜா, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய அறிவுரையின்படி, நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கீழ்கண்ட அட்டவணைப்படி பயணம் மேற்கொண்டு தொழிற்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து, அவர்களின் கோரிக்கையை பெறுவார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு சுற்றுப்பயண விவரம் பின்வருமாறு:-
தேதி | நகரம் |
---|---|
2024 பிப்ரவரி 5ஆம் தேதி | தூத்துக்குடி |
2024 பிப்ரவரி 6ஆம் தேதி | கன்னியாகுமரி |
2024 பிப்ரவரி 7ஆம் தேதி | மதுரை |
2024 பிப்ரவரி 8ஆம் தேதி | தஞ்சாவூர் |
2024 பிப்ரவரி 9ஆம் தேதி | சேலம் |
2024 பிப்ரவரி 10ஆம் தேதி | கோயம்புத்தூர் |
2024 பிப்ரவரி 11ஆம் தேதி | திருப்பூர் |
2024 பிப்ரவரி 16ஆம் தேதி | ஓசூர் |
2024 பிப்ரவரி 17ஆம் தேதி | வேலூர் |
2024 பிப்ரவரி 18ஆம் தேதி | ஆரணி |
2024 பிப்ரவரி 20ஆம் தேதி | விழுப்புரம் |
2024 பிப்ரவரி 21,22,23 தேதிகள் | சென்னை |
இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலக கட்டடம் தொடர்பான வழக்கு; உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிப்பு!