சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவம் சார்ந்தப் பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2024 - 2025ஆம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி என 19 வகையான 4 வருட பட்டப் படிப்புகளும், பார்ம் டி என்ற 6 வருட பட்டப் படிப்பு மற்றும் 3 வருட பட்டப் படிப்புகளுக்கு மே 23 முதல் ஜூன் 26 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபாக்கும் பணி முடிவடைந்து, அதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு 68 ஆயிரத்து 108 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 67 ஆயிரத்து 38 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பார்ம் டி என்ற 6 வருடப் பட்டப் படிப்புகளுக்கு 3 ஆயிரத்து 516 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 3 ஆயிரத்து 463 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பார்ம் டி மூன்று வருட பட்டப் படிப்புகளுக்கு 24 விண்ணப்பம் பெறப்பட்டதில், 23 ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல், மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்கள் 2 ஆயிரத்து 870, சுயநிதி கல்லூரிகளைப் பொறுத்தவரை 17 ஆயிரத்து 446 இடங்கள், பார்ம் டி ஆறு வருட சுயநிதிக் கல்லூரிகளில் 581 இடங்கள் மற்றும் பார்ம் டி மூன்று வருட பட்டப் படிப்புகளில் 61 இடங்கள் என உள்ளது. மாணவர்கள் தரவரிசைப் பட்டியலை https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் பார்க்கலாம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது; ஆக.21 முதல் கலந்தாய்வு தொடக்கம்!