சென்னை: திருவான்மையூர் பகுதியில் வசித்து வந்த திமுக எம்எல்ஏவின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் மருமகள் மெர்லினா தம்பதி வீட்டில் பணிபுரிந்து வந்த உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுமியை அடித்து கொடுமைப்படுத்தியதாக நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டம், அடித்தல், மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 18 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் எம்எல்ஏவின் மகன் ஆண்ட்ரோ மருமகள் மெர்லினா இருவரும் தலைமறைவாகினர். இதையடுத்து அவர்களை பிடிப்பதற்கு ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து பெங்களூரு, மதுரை உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பெங்களூரு அருகில் எம்எல்ஏவின் மகன் ஆண்ட்ரோ மற்றும் மருமகள் மெர்லினாவை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து நேற்று இரவே இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். அப்போது சில ஆவணங்கள் சரியாக இல்லாததால் நீதிபதிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து இன்று காலை எழும்பூர் நீதிபதி குடியிருப்பில் உள்ள நீதிபதி அல்லி முன்பு மீண்டும் இருவரையும் ஆஜர்ப்டுத்தினர். இருவரையும் வரும் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் இருவரையும் புழல் சிறையில் அடைப்பதற்கு போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்த் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு பத்ம விருதுகள்.. முழு பட்டியல்!