கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பில்ராம்பட்டு கிராமத்தில், வரலாற்று ஆய்வாளரான ராஜ் பன்னீா், ஸ்ரீதா் மற்றும் தாமரைக்கண்ணன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு, 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பத்தை கண்டெடுத்துள்ளனர்.
இது குறித்து திருவண்ணாமலையைச் சோந்த வரலாற்று ஆய்வாளரான ராஜ்பன்னீா் செல்வம் கூறியதாவது, "நானும் அருப்புக்கோட்டை சேர்ந்தவர்களான ஸ்ரீதர் மற்றும் தாமரைக்கண்ணன் ஆகியோர் இணைந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்டோம்.
அப்போது, நெய்வனையை அடுத்த பில்ராம்பட்டு கிராமத்தின் வயல்வெளி பகுதியில் ஒரே பலகை கல்லினால் ஆன சிற்பம் கண்டறியப்பட்டது. இது சுமார் 5 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் எட்டுக் கரங்களுடன், புடைப்பு சிற்பமாக பெண் உருவத்தில் இந்த சிற்பம் உள்ளது.
அந்த சிற்பத்தைத் தூய்மைப்படுத்தி ஆய்வு செய்ததில் பல்லவர் காலத்தைச் சோந்த கொற்றவை சிற்பம் எனத் தெரியவந்தது. சிற்பத்தில் உள்ள அணிகலன்களைக் கொண்டு பார்க்கும் போது இது கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சோர்ந்ததாகக் கருதலாம். இந்த நூற்றாண்டை சோந்த ஏராளமான கொற்றவை சிற்பங்கள் இந்தப் பகுதிகளில் ஆவணம் செய்யப்பட்டிருக்கிறது.
கொற்றவையின் தலை மகுடம் எங்கும் காணாத வகையில் தனித்துவமாய் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். பழைமையான இந்தக் கொற்றவை சிற்பம் இன்றும் வயல்வெளியின் மத்தியில் வளமையைக் காக்கும் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார். மேலும் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆற்றங்கரை வரப் பகுதிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்கால சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இது தமிழர்கள் அக்காலத்தில் எவ்வாறு வாழ்வியல் வாழ்ந்தார்கள் என்பதற்கான தகுந்த ஆதாரங்களை நம்மிடையே உணர்த்துகிறது" என்றார்.
இதையும் படிங்க: கோவையில் MyV3 Ads-க்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது!