சென்னை: மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்திற்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக 2024ஆம் ஆண்டிற்கான தேசிய விருதான பத்மபூஷன் விருது நேற்று (மே 10) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் வழங்கப்பட்டது.
விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விருது பெற்ற விஜயகாந்த் குடும்பத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், டெல்லி தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவை முடித்துக் கொண்டு பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் மற்றும் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சென்னை விமான நிலையத்தில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு வரவேற்பு அளிக்கும் வகையில், 500க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் குவிந்தனர். மறைந்த விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதினை பிரேமலதா விஜயகாந்த் திறந்தவெளி வாகனத்தில் ஏறி தொண்டர்களிடம் காண்பித்தார்.
அதன்பின், தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றார். விமான நிலையம் முழுவதும் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் பிரேமலதா விஜயகாந்த்துக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், விஜயகாந்தின் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதினை வைத்து ஆசி பெற்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜயகாந்தின் மக்கள் நலப் பணிகளுக்காகவும், திரைத்துறையில் செய்த பல்வேறு சாதனைகளுக்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த்துக்கு கிடைத்த புகழ், உண்மை தொண்டர்களால் கிடைத்தது.
இந்த விருதை உலக தமிழர்களுக்கும், தொண்டர்களுக்கும் சமர்பிக்கிறேன். விஜயகாந்த் அமைத்துக் கொடுத்த தங்கப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம். விஜயகாந்தின் கனவு, லட்சியத்தை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம்.
பத்மபூஷன் விருதினை சென்னை விமான நிலையத்திலிருந்து, தேமுதிக தலைமை அலுவலகம் வரை ஊர்வலமாக எடுத்துச் செல்ல காவல்துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் உரிய அனுமதியையும், பாதுகாப்பையும் தராமல் அனைத்து வாகனங்களையும் வெவ்வேறு பாதைக்கு அனுப்பியதால் மிகுந்த போக்குவரத்து நெரிசலோடு இங்கு வந்துள்ளேன்” என தெரிவித்தார்.