சென்னை: பொதுத்தேர்வுக்கு முன்னதாக தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்வை நடத்தக்கூடாது எனவும், பாத பூஜை செய்வது கொடுமையானது என்று புகாரின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் தனியார் பள்ளிகள் துறை தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்த செல்வி என்பவர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செயலாளர், இயக்குநர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், 'புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் 10,12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் தேர்வுக்கு முன்னர் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை வைத்து பாதபூஜை என்ற பெயரில் குறைந்தது 5 ஆயிரம் வசூலித்து பட்டிமன்ற பேச்சாளர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டவர்களை தலைமை தாங்க வரவைத்து மாணவர்களின் அம்மா, அப்பா பாச உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அவர்களை அழ செய்யும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இந்தப் புதிய சடங்கின்போது மாணவர்கள் மிகவும் அதிகமாக மனவேதனை அடைகின்றனர். பாதபூஜை போன்ற சடங்குகள் தமிழ்நாடு முழுவதும் கலச்சாரமாக பல பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற வசூல் சடங்குகளுக்கு தமிழ்நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்' என்று செல்வி தமது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) அனைத்து தனியார் பள்ளிகளின் நிர்வாகத்துக்கும் பிறப்பித்துள்ள உத்தரவில், 'புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்ட புகார் கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும், தங்களது மாணவர்களை கொண்டு, அவர்களின் பெற்றோர்களுக்கு பாத பூஜை என்ற பெயரில் எந்த நிகழ்வுகள் மேற்கொள்ளக் கூடாது என திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது.' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் மாகவிஷ்ணு பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், பள்ளிகளில் யார் வந்து பேச வேண்டும் என்பதையும், அதற்கு யாரிடம் அனுமதிப் பெற வேண்டும் என்ற விதிமுறைகளையும் பள்ளிக்கல்வித் துறை அண்மையில் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.