மதுரை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (HFA), அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 47 தூய்மைப் பணியாளர் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை, வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “போர்க்கால அடிப்படையில் மழை ஓய்ந்து மூன்று நாட்களுக்குப் பிறகு கூட மாவட்ட நிர்வாகமும், பிற அரசுத் துறைகளும் இணைந்து வெள்ள சீரமைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
மதுரையில் பெய்த கனமழையினால் எந்தவொரு பாதிப்புகளும் ஏற்படவில்லை. கனமழையினால் தேங்கிய அனைத்து மழைநீரும் அகற்றப்பட்டுள்ளது. மதுரையில் எங்கே பாதிப்புகள் உள்ளன என எம்பி சு.வெங்கடேசன் கூற வேண்டும். எதற்காக நிவாரணம் கொடுக்க வேண்டும்? செல்லூர் கண்மாயில் இருந்து வைகை ஆற்றுக்கு புதிதாக அமைக்கப்பட்ட வாய்க்காலை நிரந்தர வாய்க்காலாக கட்டுவதற்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை வெள்ளப்பாதிப்புக்கு காரணம் என்ன? நீரியல் ஆய்வாளர் சொல்லும் தீர்வு இதுதான்!
மதுரையில் மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் வாய்க்கால்கள் கட்டவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மதுரை வரும் முதலமைச்சரிடம் மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் மழை, வெள்ள பாதிப்புகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். மழைநீர் தேங்கிய பகுதிகளில் 107 மருத்துவ முகாம்கள் எப்போதும் நடைபெற்று வருகின்றன” எனக் கூறினார்.
மதுரையில் இந்த அக்டோபர் மாதத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மதுரை நகரைப் பொறுத்தவரை, கடந்த 1955 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி 115 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதன் பின்னர் தற்போது 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அக்டோபர் மாதத்தில் 100…
— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 28, 2024
முன்னதாக, மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “மதுரையில் பெய்த கடும் மழை வெள்ளத்தால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைப் பொருட்களை இழந்து பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடாக குறைந்தபட்சம் ரூபாய் 25,000 வழங்க வேண்டுமென தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.