சென்னை: ஆவடி அருகே பொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் திருமுல்லைவாயில் செந்தில் நகர் பிருந்தாவன் அவன்யூ பகுதியில் 16 வருடங்களாக ஜோதி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி திருமுல்லைவாயலில் உள்ள நகைக்கடையில் நுழைந்த மர்ம நபர்கள் இருவர், நகைக்கடை உரிமையாளர் ரமேஷை தாக்கி 50 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
அந்தப் புகாரில் ரமேஷ் குமார், “எனது கடைக்கு முகமூடி அணிந்துகொன்டு இரண்டு நபர்கள் வந்தனர். ஒருவர் உயரமாகவும், மற்றொருவர் குள்ளமாகவும் இருந்தார். அவர்கள் கத்தியும், துப்பாக்கியும் வைத்திருந்தனர். இதனால் பயந்துபோன நான், அவர்கள் மீது கால்குலேட்டரை எடுத்து வீசினேன். அப்போது ஒருவன் என்னை கீழே தள்ளினான். இதனால் எனது தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் நான் சுயநினைவை இழந்துவிட்டேன்.
நினைவு வந்ததும் பார்த்தபோது எனது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தேன். பின்னர் எனது உறவினர்களும் கடைக்கு வந்து என்னை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், எனது கடையில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு வாடிக்கையாளர்களின் அடகு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன'' என கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், திருமுல்லைவாயல் போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைத்தனர். இந்த நிலையில், கொள்ளையர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலம் பீவர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்ற போலீசார், நகைக்கடைக்குள் கொள்ளையடிக்க வந்த ஹர்ஷத் குமார் பட் (39) மற்றும் சுரேந்தர் சிங் (35) ஆகிய இருவரையும் கைது செய்து தமிழகத்துக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் விசாரித்ததில், இருவரும் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டதோடு, இந்தச் சம்பவத்தில் நகைக்கடை உரிமையாளர் ரமேஷ் குமாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்து பகீர் கிளப்பினர். அதாவது, நகைக்கடைக்காரர் ரமேஷ்குமாருக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், நஷ்டத்தை சரி கட்ட, கடையில் இருக்கும் நகைகள் காணாமல் போனால் காப்பீடு தொகை வரும் என, இவரே கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
அதன்படி, ஹர்ஷத் குமார் பட், சுரேந்தர் சிங் ஆகியோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து, கடைக்குள் வந்து கொள்ளையடிப்பதை போல நடித்துவிட்டுச் செல்லுங்கள் எனவும், காப்பீடு தொகை வந்ததும் 5 லட்சம் ரூபாய் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் போலி நகைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஹர்ஷத் குமார் பட், சுரேந்தர் சிங் மற்றும் நகைக்கடை உரிமையாளர் ரமேஷ் குமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நகைக்கடைக்காரர் நாடகம் அம்பலமான நிலையில், அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால் திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு வந்து, கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, தனிப்படை குழுவினருக்கு பாராட்டுகள் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூசி தட்டப்படும் மதுரை என்கவுண்டர் வழக்கு.. வெள்ளத்துரை அண்ட் டீம் குறித்து அனல் பறந்த வாதம்!