சென்னை: லண்டனில் இருந்து சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், தினமும் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, மீண்டும் காலை 5.35 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் செல்லும். லண்டனிலிருந்து சென்னைக்கு வந்து மீண்டும் லண்டனுக்குச் செல்ல இந்த ஒரு விமானம் மட்டுமே இருப்பதால், இந்த விமானத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை சென்னையில் இருந்து லண்டன் செல்ல இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் 314 பயணிகள் பயணம் செய்ய இருந்துள்ளனர். ஆனால், அந்த விமானம் லண்டனில் இருந்து சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக தாமதமாக புறப்பட்டுள்ளது. இதனால் சென்னையிலிருந்து லண்டனுக்கு இந்த விமானத்தில் செல்லவிருந்த பயனிகளுக்கு, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் இணையதளம் மூலம் தாமதம் குறித்து தகவல்களை அனுப்பியுள்ளது.
ஆனால், தாமதம் குறித்து தகவல் கிடைக்காத பயணிகள் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து, இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் ஆகியோர், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இதனையடுத்து, பயணிகளிடம் லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று விமான நிலைய அதிகாரிகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள், விமான நிலைய அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், அந்தப் பயணிகளை சென்னை விமான நிலையத்தில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.
இதனையடுத்து, லண்டனில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், 6 மணி நேரம் தாமதமாக காலை 9.30 மணிக்கு சென்னைக்கு வந்தடைந்தது. அந்த விமானத்தில், லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த 294 பயணிகள் விமானம் தாமதம் காரணமாக பெரும் அவதியுடன் சென்னையில் தரை இறங்கினர்.
அதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து லண்டனுக்கு வழக்கமாக காலை 5.35 மணிக்கு புறப்பட வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், தாமதம் காரணமாக பகல் 11.30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றது.
இதனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், லண்டனில் இருந்து சென்னை வரும் பயணிகள் மற்றும் சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பயணிகள் என சுமார் 600க்கும் மேற்பட்டோர் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், தாமதத்திற்கான காரணம் குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: சவுக்கு சங்கரை கைது செய்து சென்ற கார் விபத்து.. சவுக்கு சங்கருக்கு காலில் காயம் எனத் தகவல்? - Savukku Shankar