சென்னை: டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று சென்னை திரும்பிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மூன்றாவது முறையாகப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற நிகழ்ச்சியில் கலந்த கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
அதனை தொடர்ந்து, உங்கள் அணியில் இருந்த புகழேந்தி, ஜே.சி.டி பிரபாகரன், கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு தொடங்கியுள்ள நிலையில் அதில் நீங்கள் உடன் இணைவீர்களா? என்ற கேள்விக்கு, அவர்கள் எங்கிருந்தாலும் வாழட்டும் என தெரிவித்தார்.
ராமநாதபுரம் தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், ராமநாதபுரம் மக்கள் கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை எனக்கு வழங்கியுள்ளனர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் வெற்றி தோல்விகள் சகஜம்” என்றார்.
மேலும், நடைபெற்று முடிந்த தேர்தலில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது, பல இடங்களில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், “அதிமுகவில் தற்காலிக பொறுப்பை ஏற்றுள்ள தலைமையிடம் தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும்” என்றார்.
முன்னாள் எம்.பி ஜெயவர்தன் டெபாசிட் இழந்தது குறித்த கேள்விக்கு, “இது குறித்து அவருடைய தந்தையாரிடம் தான் கேட்க வேண்டும்” என பதிலளித்தார். அதனை தொடர்ந்து, பாஜகவின் ஓட்டு விகிதம் அதிகரித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், “தமிழகத்தில் பாஜக வென்ற வாக்குகள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உழைப்புக்குக் கிடைத்த வெற்றி” என்றார்.
மேலும், அதிமுக பிரிந்து இருக்கும் சக்திகள் ஒன்றிணையவில்லை என்றால் எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது என்றார்.