தஞ்சாவூர்: 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தமிழகச் சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) தாக்கல் செய்துள்ளார். கடந்த நிதியாண்டில் ரூ.38,904 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2024 - 2025 நிதியாண்டிற்கான மொத்த வேளான் பட்ஜெட் மதிப்பீடு ரூ.42,281.88 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட வேளான் நிதியை விட ரூ.3,377.88 கோடி அதிகமாகும்.
இந்த நிலையில், 2024 - 2025 நிதியாண்டிற்கான வேளான் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து டெல்டா விவசாயிகள் தங்களது வரவேற்பையும், கோரிக்கைகளையும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தஞ்சை மாவட்டம் புலவன்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாரியப்பன் கூறுகையில், "விஷமில்லா உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இயற்கை சார்ந்த பூச்சிக்கொல்லிகளைத் தயாரித்து வழங்குவதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அறிவிப்பை வரவேற்கிறோம். மேலும், மண்புழு உரம் தொட்டி அமைத்தல்; இலவச மின்சாரத் திட்டம் நிதி ஒதுக்கீடு ஆகிய திட்டங்களை வரவேற்பதாகவும்" விவசாயி மாரியப்பன் கூறினார்.
தொடர்ச்சியாகப் பேசிய அவர், "நெல் குவிண்டாலுக்கான ஊக்கத்தொகையை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தி வழங்க வேண்டும், செலவினங்கள் அதிகரிப்பால் ஊக்கத் தொகையை ரூ.107-ல் இருந்து ரூ.93 உயர்த்தி ரூ.200-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பைத் தமிழக முதலமைச்சர் பரிசீலனை செய்து நெல் குவிண்டால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
அதேபோல், கர்நாடகா அரசு தொடர்ந்து தண்ணீர் தர மறுத்தும் காவிரியில் மேகதாது அணையைக் கட்ட தொடர்ந்து முயற்சி செய்தும் வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு பட்ஜெட் கூட்டத் தொடரில் இது குறித்த எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆகவே, அணையைக் கட்ட விட மாட்டோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி தடையை உருவாக்க வேண்டும்.
தண்ணீர் இல்லையென்றால் டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும். அதை மாற்றுவதற்குத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மேகதாது அணையைக் கட்டாமல் இருப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி மத்திய அரசுக்கும், கர்நாடகா அரசுக்கும் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான், விவசாயம் செய்ய முடியும் என்ற சூழல் உருவாகும். இல்லையென்றால் நிச்சயமாக டெல்டா பகுதி விவசாயம் பாதிக்கப்படும், உணவு உற்பத்தி இழப்பு ஏற்படும்" என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.
அவரைத்தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் குருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் என்பவர் பேசுகையில், "ஒரு கிராமத்திற்கு ஒரு பயிர் என்ற புதிய திட்டம் அறிமுகம்; கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.215 என்ற அடிப்படையில் அதற்கு உண்டான ரூ.250 கோடி மொத்த நிதி ஒதுக்கீடு ஆகிய திட்டங்களை வரவேற்கிறோம்.
இதுமட்டும் அல்லாது, சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு; புதிய கரும்பு ரகங்கள் சாகுபடி செய்ய நிதி ஒதுக்கீடு; கூட்டுறவு வங்கிகளில் ரூ.16,500 கோடி பயிர்க் கடன் இலக்கு நிர்ணயம்; பயிர்க் காப்பீடு; நுண்ணுயிர் பாசனத் திட்டம்; தென்னை வளர்ச்சி ஆகிய திட்டங்களுக்கான அறிவிப்பையும் வரவேற்கிறோம்.
மேலும், இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக அமையும், அதுபோல டெல்டா மாவட்டத்தில் ஆறுகளைத் தூர்வாருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளோம். இதுமட்டும் இல்லாது நெல்லுக்கான விலையை உயர்த்தி வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட்டில் முக்கனி மேம்பாட்டு சிறப்புத் திட்டம் அறிவிப்பு - முழு விவரம்!