சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், மேலும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் பயன்பாட்டில் உள்ளது.
2023ஆம் ஆண்டில் 9 கோடியே 11 லட்சத்து 2 ஆயிரத்து 957 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கி வருகிறது.
இதுபோல், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தொடர்ந்து பல சேவைகளை செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஓ.என்.டி.சி (ONDC-NETWORK) தனியார் டிஜிட்டல் விற்பனைத் தளத்தில், சென்னை மெட்ரோ ரயில் பயணச்சீட்டினைப் பெறவதற்கு முக்கிய பங்காக இருக்கிறது.
இது குறித்து சென்னை மெட்ரொ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் சித்திக் கூறுகையில், “ONDC உடன் இணைந்து செயல்படுவதன் மூலம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் பயணச்சீட்டு பயன்பாட்டு சேவைக்கான பல வசதிகளை முழுவதுமாக அளிக்க முடிகிறது மற்றும் பல்வேறு வகையான செயலி தயாரிப்பவர்களும், தங்கள் செயலியை சென்னை மெட்ரோ ரயில் பயணச்சீட்டு அமைப்புடன் ஒருங்கிணைக்க அனுமதிக்கிறது. நிச்சயமாக, மற்ற மெட்ரோ ரயில் நிறுவனங்கள், பெருநகரப் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் இதர போக்குவரத்து நிறுவனங்களும் விரைவில் ONDC நெட்வொர்க் உடன் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது”என தெரிவித்தார்.
மேலும், இது குறித்து ONDC நெட்வொர்க்கின் மேலாண்மை இயக்குனர் டி.கோஷி கூறியதாவது, “ONDC நெட்வொர்க்கில், நாங்கள் புதுமைகளை ஏற்றுக் கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். சென்னை மெட்ரோ ONDC நெட்வொர்க்கில் இணைவதால், இது ஒரு வளர்ச்சி மட்டுமல்ல, போக்குவரத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும். இது வெறும் பயணச்சீட்டுகளைப் பற்றியது அல்ல, இது பயணிகளுக்கான முழு எளிய வசதிகளை உருவாக்கும் தன்மையாகும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரபல நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழந்தார்!