விழுப்புரம்: விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வேடம்பட்டு ஊராட்சியில், தனியாருக்குச் சொந்தமான மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வேடம்பட்டு, நன்னாடு ஊராட்சியில் வசித்து வரும் பொதுமக்கள், பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால், மருத்துவ சுத்திகரிப்பு ஆலையை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி வேடம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், ஆலையை மூட மாவட்ட நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த வேடம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் நாடாளுமன்றத் தேர்தலை முழுவதுமாக புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அந்த ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுக் காற்றால் வேடம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 20 பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம், மூச்சுத் திணறல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள், உடனடியாக மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, பொதுமக்கள் அந்த நிறுவனத்தை மூடக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில், இன்று (ஏப்ரல் 21) வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறையினர் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்குச் சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: “வாக்களிக்காமல் அரசை குறை கூறுவது தவறானது”..முதல் முறையாக வாக்களித்த அன்புமணி மகள் சஞ்சுத்ரா! - Lok Sabha Election 2024