ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அம்மூர் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் சரஸ்வதி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ரயில் பயணச்சீட்டு அலுவலகத்திற்கு அருகே சந்தேகிக்கப்படும் படி நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இளைஞர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், போலீசார் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அந்த விசாரணையில், இளைஞர் ஒடிசா மாநிலம் காஸ்படா கிராமத்தைச் சேர்ந்த நரேந்திர பிஸ்கோயல்(25) என்பதும், கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் சமையல் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.
மேலும், ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து அவரது நண்பரான ஷபி(36) என்பவர் கஞ்சா பையைக் கொடுத்து அனுப்பியதும் தெரிய வந்தது. இந்நிலையில் அவர் வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், இளைஞரை சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: “அறிவியல் எக்ஸாம்-க்கு முந்தைய நாள் அப்பா இறந்துட்டாங்க..” தாயார் வைத்த முக்கிய வேண்டுகோள்! - 10th Result In Tamil Nadu