சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஜூன் 5ஆம் தேதி மாலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆம்ஸ்ட்ராங்கின் அயனாவரம் இல்லத்தில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆம்ஸ்ட்ராங் படுகொலை மிகப்பெரிய துயரச் சம்பவம், மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரைச் சந்தித்து என்னுடைய அனுதாபங்களை தெரிவித்தேன். இது போன்ற படுகொலை இனி எந்தப் பகுதியிலும் நடைபெறக்கூடாது என்ற சிந்தனையோடு அரசு செயல்பட வேண்டும்.
மேலும், காவல்துறை இந்த வழக்கு குறித்து விரிவான விசாரணை நடத்தி, இந்த குற்றச் சம்பவத்தை அரங்கேற்றியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதை நான் தமிழக அரசிடம் கோரிக்கையாக வைக்கிறேன். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாது.
இச்சம்பவத்தின் சட்ட நடவடிக்கைகள் ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும். இறந்தவர் மிகப்பெரிய மனிதாபிமானம் உள்ளவர், மேலும், பகுஜன் சமாஜ் கட்சி என்னும் தேசிய கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்தவர். அதனால் ஆம்ஸ்ட்ராங் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: “எனது உயிருக்கும் அச்சுறுத்தல்..” ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரைச் சந்தித்தபின் அன்புமணி ராமதாஸ் பேட்டி!