சென்னை: தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நாளை எங்கெங்கு மழை பெய்யும்: அக்டோபர் 15(செவ்வாய்கிழமை) நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை எச்சரிக்கை
— TN DIPR (@TNDIPRNEWS) October 14, 2024
பொது மக்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிய அறிவுரைகள்#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/e7OObpJke7
முதலமைச்சர் அவசர ஆலோசனை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், போக்குவரத்து, மருத்துவம், மின் சேவை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
பள்ளிகளுக்கு விடுமுறை(TN Schools Leave): பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, மழை காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுரை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள்(IT) தங்களது ஊழியர்களை நாளை முதல் அக்.17 வரை வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
கூடுதல் மெட்ரோ ரயில்(Chennai Metro): வடகிழக்கு பருவமழையால் சென்னை வாசிகள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது. கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால், பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ இரயில் சேவைகள் மேற்கண்ட நாட்களில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கார் பார்க்கிங் இடமாக மாறி வேளச்சேரி மேம்பாலம்: சென்னையில் கடந்த 2015 பெரு வெள்ளத்தின் போது வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தரைத்தளம் முழுவதும் தண்ணீர் தேங்கியதோடு கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் உள்ள ஏராளமானோர் வேளச்சேரி மேம்பாலத்தின் இன்று மாலை முதலே தங்களது கார்களை நிறுத்தி வருகின்றனர். ஆனால் அந்த கார்களுக்கு போக்குவரத்து துறை ரூ.1000 வரை அபராதம் விதிப்பதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடைகளில் காலியாகும் பொருட்கள்: மழை எச்சரிக்கையை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, பால், ரொட்டி, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறி பொருட்கள் வாங்க மளிகை கடைகள், பல்பொருள் அங்காடியில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதேநேரத்தில் பொதுமக்கள் பதற்றம் அடையாமல் இருக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நான்கு பேர் மரணம்; ரூ.4 லட்சம் நிவாரணம்: வடகிழக்கு பருவமழையின் காரணமாக 12.10.2024 மற்றும் 13.10.2024 ஆகிய நாட்களில் மதுரையை சேர்ந்த கணேசன், ராமநாதபுரத்தை சேர்ந்த வேணுகானப்பிரியா, சிவகங்கையை சேர்ந்த பீட்டர் மற்றும் அய்யாகண்ணு ஆகிய நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் குடும்பத்திற்கு மாநில பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளின்படி நிவாரணத் தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.4 லட்சம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர உதவி எண்(Chennai Rains Help line Numbers): சென்னை மாநகராட்சி சார்பில் அவசர உதவி எண் 1913 அழைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் வீட்டிற்குள் பாம்பு புகுந்தால் 044-22200335 என்ற எண்ணை அழைக்க கிண்டி வனத்துறையும், 94987 94987 என்ற அழைக்க மின்சாரத்துறையும் உதவி எண்களை அறிவித்துள்ளன.