சென்னை: 18வது மக்களவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு முதல் கட்டமாக ஏப்ரல் 19ந் தேதி துவங்கி ஜூன் 1ஆம் தேதியுடன் 7 கட்டங்களாக நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளிலும் நடந்து முடிந்தது. நாளைய தினம் (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
அந்த வகையில் நாளைய தினம் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 நாடாளுமன்றத் தொகுதியிலும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக, வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி: வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 7,30,395 ஆண் வாக்காளர்களும், 7,65,286 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 543 பேர் என 14,96,224 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 4,51,334 ஆண் வாக்காளர்களும், 4,47,884 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 149 பேர் என 8,99,367 வாக்காளர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர். அதன்படி மொத்த எண்ணிக்கையில் 60.11 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகளில் கூடுதலாக 20 சதவீதம் பேர் உள்பட 357 நுண் பார்வையாளர்கள், 374 மேற்பார்வையாளர்கள், 380 உதவியாளர்கள் மற்றும் 322 அலுவலக உதவியாளர்கள் என மொத்தம் 1433 பணியாளர்கள் பணிபுரியவுள்ளனர்.
வட சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரியில் 176 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளன்று வாக்குகள் எண்ணும் அரங்கில் டேபிள் வாரியாகவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, (செல்போன் எண் 94459 10953) பெரம்பூர், கொளத்தூர் மற்றும் திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு ராஜேஷ் குமார், (செல்போன் எண். 94459 10932) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி: லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையை மொத்தம் 300 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு 445 காவல்துறையினர் மூன்றடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது பார்வையாளர்களாக ஜிதேந்திரா ககுஸ்தே எஸ்.சி.எஸ் மற்றும் டாக்டர் சுரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியச் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6,67,465 ஆண் வாக்காளர்களும், 6,82,241 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 455 பேர் என 13,50,161 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3,70,660 ஆண் வாக்காளர்களும், 3,57,819 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 135 பேர் என 7,28,614 வாக்காளர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர். மத்திய சென்னையில் பதிவான வாக்கு சதவீதம் 53.96. தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது 3 மையங்களிலும் பாதுகாப்புப் பணியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாளை வாக்கு எண்ணிக்கை இப்படித்தான் நடக்கும்! தேர்தல் முடிவுகளுக்கு தயாராகுங்கள்!