தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். பேரணியை ஸ்ரீதர் வேம்பு துவக்கி வைத்தார்.
சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இப்பேரணியானது திருவேங்கடம் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், "போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டும் என சென்னையில் பல பெற்றோர்கள் என்னிடம் புகார் அளிக்கின்றனர். தமிழகத்தில் அதிகளவு கஞ்சா பிடிக்கப்பட்டதாக மட்டுமே தகவல்கள் உள்ளது. மத்திய அரசு போதை தடுப்பு பிரிவினர் மூலம் மட்டுமே பிற போதைப்பொருட்கள் பிடிக்கப்படுகிறது.
இதையும் படிங்க:"இந்திய மக்களின் எதிர்ப்பை மீறி மோடி இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வருகிறார்" - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு! -
போதை கிடங்குகள் பாகிஸ்தான், தமிழகம் மற்றும் துபாய் போன்ற பகுதிகளில் செயல்படுகிறது. மத்திய அரசு போதை தடுப்புப் பிரிவினர், பல கிலோ கிராம் கெமிக்கல் போதைப் பொருட்களைப் பிடிக்கின்றனர். ஆனால் மாநில போலீசார் ஒரு கிராம் கூட பிடித்ததாகத் தெரியவில்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கல்லூரி மற்றும் பள்ளிகளில் போதைக்கு எதிரான குழுக்களை தொடங்குங்கள். ஒரு மாணவர் போதைக்கு அடிமையாவதை நீங்கள் உணர்ந்தால் அவரிடம் நட்பாகப் பேசி போதை பழக்கத்திலிருந்து அவர் விடுபட வழிவகை செய்யுங்கள்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
பெற்றோர் - குழந்தைகள் இப்போது ஒன்றாக நேரம் செலவழிப்பது தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது. ஒரே அறையிலிருந்தாலும் கூடப் பெற்றோரும் குழந்தைகளும் ஒன்றாக நேரத்தைச் செலவிடுவதில்லை. தங்கள் செல்போன்களையே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
பெற்றோர்கள் தான் குழந்தைகளின் முதல் பொறுப்பாளர்கள். எனவே, குழந்தைகளுடன் பெற்றோர் செலவு செய்வது அவசியம். அப்போது தான் குழந்தைகள் தவறான பாதையில் செல்லாமல் தடுக்க முடியும்" என்றார்.
முன்னதாக பேரணியில் கலந்து கொள்வதற்காக சங்கரன்கோவில் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, இங்கு பிரசித்த பெற்ற சங்கரநாராயணன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.