சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் முன்னாள் அமைச்சர் பொன்முடி பதவி இழந்தார், திருக்கோவிலூர் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதே வழக்கின் மேல்முறையீட்டில் இந்த தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் மீண்டும் எம்.எல்.ஏ.வாக தொடர்வார் என சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்தது.
ஆனால் பொன்முடி அமைச்சராக பதவியேற்பு செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னமும் பதிலளிக்கவில்லை. இந்த நிலையில், வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதோடு, சமீபத்தில் விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி பாஜகவில் இணைந்ததால், கட்சித் தாவல் சட்டத்தின்படி அவர் தனது பதவியை இழந்தார்.
இந்த நிலையில், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அன்றைய தினம் நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல், பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்கோவிலூர் தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கை ஒன்று இணைய தளத்தில் வலம் வந்தது. இதற்கு விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், திருக்கோவிலூர் தொகுதிக்கு தேர்தல் இல்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், பொன்முடி பதிவி ஏற்பு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பில் சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன? - முழு விவரம்!