சென்னை: சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 35 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார். இவர் திரிபுரா மாநில தலைமைச் செயலாளராகவும், மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு உயர் பதவிகளிலும் இருந்துள்ளார்.
ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வந்த இவர், சமீபத்தில் தனது 97வது வயதில் காலமானார். இந்த நிலையில், இவரது நினைவேந்தல் நிகழ்ச்சி, இன்று மாலை (ஏப்.27) சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்களான கிருஷ்ணமூர்த்தி, கோபாலசாமி, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் பி.எஸ்.ராகவனின் செயல்பாடுகள் குறித்து பேசினர்.
அந்த வகையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், "பி.எஸ்.ராகவன் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர். குறிப்பாக, வங்காளதேசம் பிரிவினை மற்றும் பாகிஸ்தான் உடனான போர் போன்ற இக்கட்டான காலகட்டங்களில் உள்துறையில் 9 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சிக்கு அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். பாதுகாப்புத் துறை அமைச்சராக தான் பணியாற்றிய காலங்களில் தனக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பி.எஸ்.ராகவன் வழங்கினார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்கி 2898 ஏடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! - KALKI 2898 AD Releases On June 27