நீலகிரி: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் இன்று (ஏப்ரல் 08) பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி, பவானிசாகர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், வேட்பாளர் ஆ. ராசா புஞ்சை புளியம்பட்டி நகர் பகுதியில், 15 லட்சம் ரூபாய்க்கான மாதிரி காசோலையைத் தயார் செய்து பொதுமக்கள் மத்தியில் காண்பித்து மோடியையும், ஒரு ஆட்டுக்குட்டிக்குக் கழுத்தில் மாலை அணிவித்து அண்ணாமலையையும் கிண்டல் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதேபோல் பவானிசாகர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் மற்றும் விண்ணப்பள்ளி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்காத பாஜக அரசைக் குறை கூறும் வகையில் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், வேலை வாய்ப்பை ஏற்படுத்தாமல் இளைஞர்களை ஏமாற்றிய பாஜக அரசைக் குறைகூறும் விதமாக வடை சுட்டு பொதுமக்களுக்கு வழங்கி நூதன முறையில் ஆ. ராசா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும், இந்த பிரச்சார கூட்டத்தில் ஸ்டாலினுக்கு மோடிக்கும் தான் தற்போது போட்டி எனவும் பேசினார்.