ஈரோடு: புன்செய் புளியம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் நீலகிரி மக்களவைத் தொகுதி பிரிவுகளின் பிரதிநிதிகள் மாநாடு நேற்று (பிப்.15) நடைபெற்றது. இதில், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட உதகை, குன்னூா், கூடலூா், மேட்டுப்பாளையம், பவானிசாகர் மற்றும் அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில், மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டியிடாத நிலையில், யாரை வேட்பாளராக நிறுத்துவது, தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவுக்கு எதிராக செல்வாக்கு மிக்க வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், நீலகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கடந்த பத்தாண்டு காலமாக நீலகிரி தொகுதி எம்.பியாக இருந்த ஆ.ராசா, தொகுதி மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. இவர் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிறை சென்றவர். இந்தத் தேர்தலில் டெபாசிட் கூட வாங்காமல் தோல்வி அடைவார்.
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் திட்டம் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியின் நலத்திட்டங்களைக் கூறி வாக்கு சேகரிப்போம். தேர்தல் பிரதிநிதிகள், தங்களது வார்டில் அதிக வாக்குகள் பெற்றால்தான் பாஜக 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். நீலகிரி மக்களவைத் தொகுதியில், ஆ.ராசாவுக்கு எதிராக மக்கள் செல்வாக்குமிக்க பாஜக வேட்பாளரை கட்சித் தலைமை அறிவிக்கும்” என்று தெரிவித்தார்.
இதில், ஈரோடு மாவட்ட வா்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவா் சந்திரசேகர், மாவட்ட பாஜக தலைவர்கள் கலைவாணி, சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வழக்கறிஞர்கள் பாஜகவில் இணைந்தனர்.
இதையும் படிங்க: விசிக பொதுச் செயலாளராக தேர்தல் ஆலோசகர் ஆதவ் அர்ஜூனா நியமனம்! பொதுத் தொகுதியில் போட்டியா? பின்னணி என்ன?