சென்னை: உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள ஹிஸ்புத் உத் தஹீரிர் (Hizb-ut-Tahrir) என்ற அமைப்பிற்கு சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த தந்தை - மகன் உட்பட மூன்று பேர், மேலும் அவரது கூட்டாளிகள் ஒன்றிணைந்து பல்வேறு நபர்களை மூளைச்சலவை செய்து, தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் பயங்கரவாத செயல் என்பதால், இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகளுக்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, இதில் தொடர்புடைய நபர்களை கைது செய்து தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், இன்று (செப்.24) காலை முதல் சென்னை தாம்பரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் கைது செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள், சந்தேகப்படக்கூடிய நபர்களின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை இதுவரை ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து இரண்டு முறை காவலில் எடுத்து விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
அதில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையின் முடிவிலே ஆவணங்கள் ஏதாவது கைப்பற்றப்பட்டதா அல்லது வேறு யாரவது முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டார்களா என்ற முழு விவரங்கள் வெளிவரும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.