ராமநாதபுரம்: புதிய பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சௌத்ரி முன்னிலையில் 80 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்நிகழ்வின் போது மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா உள்ளிட்ட ரயில்வே அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து ராமேஸ்வரம் செல்ல ரூ.550 கோடி செலவில் புதிய ரயில் பாலம் பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் பாலத்தின் நடுவே கப்பல் போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து ஏற்றி இறக்கும் அமைப்பு, ரயில் வேகப் பரிசோதனைகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ரயில்வே தென் மண்டல பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சௌத்ரி நேற்று (நவம்பர் 13) தனது ஆய்வை தொடங்கி, இரண்டாம் நாளாக இன்றும் ஆய்வுகளை மேற்கொண்டார். நேற்றைய ஆய்வின்போது பாலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து சென்று, அதன் கட்டுமான தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று பாம்பன் பாலத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள லிஃப்டிங் கிர்டரை ஆய்வு செய்தார். அச்சமயம் ரயில் பாலத்தின் மையப்பகுதி செங்குத்தாக ஏற்றி இறக்கி பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் வரை அதிவேகமாக ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க |
மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்திலும், பாம்பன் பாலத்தில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்திலும் ரயில் இயக்கப்பட்டது. இதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி முழுவதுமாக பார்வையிட்டு உறுதி செய்தார்.
இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த ஆய்வுக்கு பிறகு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் பாம்பன் புதிய ரயில் பாலம் போக்குவரத்திற்காக திறந்து விடப்படும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.