சென்னை: இந்திய நிதி அமைச்சகம் நேற்று முன்தினம் (ஜன.30) வெளியிட்ட உத்தரவில் தமிழ்நாட்டில் சென்னை சர்வதேச விமான நிலையம், விமான நிலைய சரக்ககம், சென்னை துறைமுகம் ஆகிய சுங்கத்துறை அலுவலகங்களுக்கு, 39 எக்ஸாமினேசர் ஆபிஸர் (Examiner Officer) புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்கள் அனைவரும் பயிற்சி காலம் முடிந்து, தமிழ்நாட்டில் உள்ள தென் மண்டல சுங்கத்துறை அலுவலகங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று (ஜன.31) பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.
இவர்களை சென்னை விமான நிலையம், சரக்ககம் (Cargo), சென்னை துறைமுகம், திருச்சி, கோவை சர்வதேச விமான நிலையங்கள் ஆகிய இடங்களில் பணி நியமனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 39 பேரில், பெரும்பான்மையோர் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், புதிதாக 39 பேர் பணிக்கு வந்துள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகிய இடங்களில் பணியில் இருந்த பல அதிகாரிகள், வடமாநிலங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள 39 பேர்களில், ஒருசிலரை தவிர மற்ற யாருக்கும் ஹிந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மாநில மொழிகள் தெரியாது என்றும் கூறப்படுகிறது.
மேலும், தற்போது எக்ஸாமினிங் ஆபீஸர்களாக பணியில் சேர்ந்துள்ளவர்கள் சுங்கத்துறையில் இன்ஸ்பெக்டர் ரேங்கில் உள்ளவர்கள் என்றும், அடுத்ததாக பிரிவியண்ட் ஆபிசர் ரேங்கில் கூடுதலாக 50 பேர் புதிதாக நியமிக்கப்பட இருப்பதாகவும், அது குறித்த பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட்டும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்தில் கட்டப்படும் புதிய மீன் அங்காடிக்கு கூடுதலாக ரூ.4.96 கோடி ஒதுக்கீடு - சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!