சென்னை: சென்னை அடுத்த காரம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயந்தி (62). தன்னிடமுள்ள ஐந்து சவரன் பழைய தங்க நகையை கொடுத்துவிட்டு புது நகை எடுப்பதற்காக தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடைக்கு கடந்த 13ஆம் தேதி தனது இரு மகள்களுடன் சென்றுள்ளார்.
அங்கு நகை மாடல்கள் பிடிக்காததால் வேறு ஒரு நகை கடைக்கு சென்று நகை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளனர்.
போகும் வழியில் ஜவுளிகடைக்கு சென்று ஆடைகள் எடுத்துள்ளார். பின்னர் ஜெயந்தி தனது மகள்களுடன் வேறு ஒரு நகை கடை கடைக்கு சென்று நகையை தேர்வு செய்துவிட்டு, தன்னிடம் இருந்த பழைய நகையை கொடுக்க தனது பையை பார்த்தபோது அதில் இருந்த ஐந்து சவரன் நகையை காணவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து முதன் முதலாக சென்ற நகைக்கடை மற்றும் ஜவுளிகடைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஜெயந்தி சென்று பார்த்தபோது துணிகடையில், அடையாளம் தெரியாத மாஸ்க் அணிந்த பெண் கைப்பையில் இருந்து நகையை எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் ஜெயந்தி புகார் அளித்தார். மாஸ்க் அணிந்த பெண்ணின் கண்களின் பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், புதுச்சேரியை சேர்ந்த பிரபல திருட்டு குற்றம் புரியும் நெல்லித்தோப்பு தென்னரசி (52) என தெரியவந்தது.
இதையும் படிங்க: போலீஸ் மீதே பெப்பர் ஸ்பிரே அடித்த பலே திருடர்கள்! மாஸாக துரத்தி பிடித்த போலீசார்!
இதையடுத்து மாம்பலம் போலீசார் புதுச்சேரி சென்று தென்னரசியை கைது செய்து அவரிடம் இருந்த பத்தாயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்ததுடன் 5 சவரன் நகையை எங்கு வைத்துள்ளார் என்று விசாரணை செய்து வருகின்றனர். தொடர் விசாரணையில் தென்னரசி மீது மாம்பலம் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கு உள்ளது தெரிய வந்தது. மேலும் சென்னை மட்டுமின்றி விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இவர் மீது நகை திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.
திருடிய நகையை விற்று மது அருந்துவது ஹோட்டல்களுக்கு சென்று விதவிதமாக சாப்பிடுவது இவரது வழக்கம் என்றும் திருவிழா காலங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை காட்டுவதை வழக்கமாக கொண்டவர் என காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்