திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மலைக்கிராமமான நெக்னாமலை உள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மலைக்கிராமத்தில் இதுவரை முறையான சாலை வசதி இல்லாத காரணத்தினால், அங்கு வசிக்கும் பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிகள், முதியோர் உள்ளிட்ட மலைக்கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக மலைக்கிராமத்தில் வசிக்கும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்படும் போது, அப்பெண்ணை டோலி கட்டி மலை அடிவாரத்திற்கு தூக்கிக் கொண்டு வந்து, பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது.
சாலை அமைக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக நெக்னாமலை கிராம மக்களே ஒன்றிணைந்து, மலை அடிவாரத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தற்காலிக மண் சாலை அமைத்தனர்.
அதனையடுத்து, மலைக்கிராம மக்கள் படும் துயரத்தைக் கண்ட சின்னத்திரை KPY பாலா, கடந்த ஜனவரி 30ஆம் தேதி நெக்னாமலை மக்களுக்கு, இலவசமாக ஆம்புலன்ஸ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நெக்னாமலை மலைக்கிராமத்தைச் சேர்ந்த முத்துநாயக்கர் என்பவர் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (மே.02) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடலை சொந்த கிராமமான நெக்னாமலைக்கு உறவினர்கள் KPY பாலா வழங்கிய இலவச ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.
இருப்பினும், மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கிராமத்திற்குச் செல்லும் வழியில் சாலை வசதி இல்லாததால், உறவினர்கள் முத்துநாயக்கரின் உடலை டோலி கட்டி நெக்னாமலை கிராமத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், முறையான சாலை வசதி இல்லாததால் நெக்னாமலை கிராமத்தைச் சேர்ந்த பலர் விவசாயத் தொழிலை கைவிட்டு, தங்களது குடும்பத்தினருடன் வெளியூர்களில் கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "என் மகன கட்ட மாட்டியா..?” முறைப்பெண்ணைக் கடத்த முயன்ற தாய் - மகன் கைது! - Salem Minor Girl Kidnapping