சென்னை: தமிழ்நாட்டில் 5 இடங்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அரசு சார்பில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு விண்ணப்பம் அளிக்காததால் நடப்பாண்டில் அனுமதி கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வரும் 2025-26ஆம் கல்வியாண்டில் மத்திய அரசின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள தலா 100 இடங்களை 150 இடங்களாக உயர்த்துவதற்கு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் பணிகளை துவக்கி உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவில் 10 லட்சம் மக்கள்தொகை இருந்தால் 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து, தேசிய மருத்துவ ஆணையம் மக்கள்தொகை அடிப்படையில் மருத்துவக் கல்லூரி என்ற விதிமுறையை திரும்பப் பெற்றது.
இந்தியாவில் எம்பிபிஎஸ் படிப்பில் புதிய மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கும், ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை, எண்ணிக்கை இடங்களை அதிகரிக்கவும், தேசிய மருத்துவ ஆணையம் ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பங்களை பெற்றது.
அப்போது தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், 10 லட்சம் மக்கள்தொகை இருந்தால் 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் புதிய மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்படும் என்ற விதிமுறை கடந்த 2023ஆம் ஆண்டு மருத்துவ மதிப்பீடு மற்றும் தர நிர்ணய வாரியத்தால் அறிவிக்கப்பட்டது.
அதனை மாற்றி புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில், 2024-25ஆம் கல்வியாண்டிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2025-26ஆம் கல்வியாண்டில் இருந்து 10 லட்சம் மக்கள்தொகை இருந்தால் எம்பிபிஎஸ் படிப்பில் 100 இடங்களுக்கு அனுமதி என்ற விதிமுறை கட்டாயம் பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், புதிதாக 113 மருத்துவக் கல்லூரியும், 58 கல்லூரிகளில் ஏற்கனவே உள்ள இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பம் செய்திருந்தனர். அதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வரை பெறப்பட்டன. விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பின்னர் கடந்த ஜூலை 7 ஆம் தேதி புதிய மருத்துவக்கல்லூரிக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
அதில், உத்தரப்பிரதேசத்தில் 22 , மகாராஷ்டிராவில் 14, ராஜஸ்தானில் 12, தெலங்கனாவில் 11, மேற்கு வங்கத்தில் 8, மத்தியப் பிரதேசத்தில் 7, ஆந்திராவில் 7, கர்நாடகாவில் 5, தமிழ்நாட்டிற்கு 5 தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் கேரளாவில் 2 மருத்துவக் கல்லூரிகளும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் ஓங்கூா் கிராமத்தில் தக்ஷசீலா மருத்துவக் கல்லூரி, விருதுநகா் மாவட்டம் கிருஷ்ணன்கோயில் கலசலிங்கம் மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலூரில் அன்னை மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம் அவனம்பட்டில் ஜே.ஆா்.மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் கன்னியாகுமரி மருத்துவ ஆராய்ச்சி மிஷன் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதியதாக 6 மருத்துவக்கல்லூரியை துவங்குவதற்கு தேவையான பணிகளை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் துவங்கி உள்ளது. மேலும் மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம் அல்லது ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் விபரம், குழந்தைப் பிறப்பு, அறுவை சிகிச்சை போன்ற விபரங்களை ஊரக சுகாதார நல இயக்குனரிடம் இருந்து கடந்த மாதம் கேட்கப்பட்டது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் 2023 ஆம் ஆண்டு விதிமுறைகளின் படி, 10 லட்சம் மக்கள் தொகை இருந்தால் 100 எம்பிபிஎஸ் இடங்கள் அனுமதிக்கப்படும். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.
மருத்துவக் கல்லூரி அமைவதற்கான இடம் கிராமப்புறங்களில் 25 ஏக்கர் இருக்க வேண்டும். மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை வேறு இடங்களில் இருந்தால் 30 நிமிடத்திற்குள் அல்லது 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும். 220 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைந்திருக்க வேண்டும். மருத்துவர்கள், பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக்கல்லூரியை துவங்குவதற்கு தேவையான இடத்தை ஒதுக்கீடு செய்தும் அனுமதி அளிக்கப்படவில்லை. இடம் ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்த பின்னர் 2025-26ஆம் கல்வியாண்டில், புதிய மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கு மத்திய அரசின் நிதியுதவியையும் கேட்க உள்ளது.
மத்திய அரசு நிதியுதவி அளித்த பின்னர் தான் புதிய மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும் என மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாளை பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு! - Engineering Cut Off Mark