சென்னை: மாறிவரும் உயர் கல்வியின் முக்கிய அம்சங்கள் குறித்தும், மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில் சிறந்த கருத்துக்களையும் நடைமுறைகளையும் பரிமாறிக் கொள்ள ஒரு தளத்தை உருவாக்குவது பற்றியும் சென்னை ஐஐடியில் முதன்முறையாக பான் ஐஐடி மாணவர் நிர்வாகம் மாநாட்டை நடத்தி உள்ளது.
இந்த மாநாட்டில் உத்திசார் கலந்துரையாடல், திட்டமிடல் ஆகியவை இடம்பெற்றிருந்தது. அத்துடன் மாணவர் பிரதிநிதிகள் தங்களது கல்வி நிறுவனங்களில் தேவைப்படும் மாற்றங்களை செயல்படுத்தவும், ஐஐடி சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பை வழங்கவும் ஏதுவாக அதிகாரங்களை வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் அனைத்து ஐஐடி-க்களிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மாணவர் நிர்வாகத்தை செம்மைப்படுத்துவது குறித்தும் இந்த மாநாட்டில் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
நிலையான கல்வி நிறுவன வளாகக் கொள்கைகள் மற்றும் மாணவர் நடைமுறைகள், கல்வி தரநிலைகள் மற்றும் கொள்கைகள், மாணவர்களின் மனநலம் மற்றும் முழுமையான நலவாழ்வு, ஆராய்ச்சி விவகாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நிபுணர்களின் விரிவுரைகள் மாநாட்டில் இடம்பெற்றன.
இதையும் படிங்க: TNPSC குரூப் 4 தேர்வு முடிவு வெளியீடு! தேர்வர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
இளங்கலை பட்டப்படிப்புக்கான வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு மேலாண்மைக் கொள்கைகள், ஆராய்ச்சி உள்கட்டமைப்பு மற்றும் தொழில் மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்ப விழா உத்திகள் பற்றிய விவாதங்களும் நடைபெற்றது. மேலும் அனைத்து ஐஐடி-க்களிலும் உள்ள சவால்களை எதிர்கொண்டு தீர்வு காணவும், ஒட்டுமொத்த மாணவர் அனுபவத்தை மேம்படுத்தவும் மாணவர் சமூக மட்டத்தில் செயல்படுத்தக் கூடிய உத்திகள், முயற்சிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அனைத்து ஐஐடி-க்களின் மாணவத் தலைவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து தரப்பினர் இடையே இணைப்பையும் வலுவான வலையமைப்பையும் இம்மாநாட்டின் மூலமாக ஏற்படுத்திக் கொண்டனர்.
திறமையான மேலாண்மை: இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது,"எந்தவொரு நிறுவனத்தை நிர்வகித்தலும் திறமையான மேலாண்மையும் ஒருங்கிணைந்த பகுதிகளாகும். இந்த மாநாடு மாணவர் பிரதிநிதிகளிடையே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி, ஐஐடி வளாகங்களில் நிலவிவரும் முக்கிய பிரச்சனைகளுக்கு திறம்படத் தீர்வு காண்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. மேலும் மாநாட்டின் முடிவுகளும் பரிந்துரைகளும் மிகத் தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுப் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான செயல்: தொடர்ந்து சென்னை ஐஐடி டீன் (மாணவர்கள்) சத்தியநாராயணன் என்.கும்மாடி பேசும்போது, "பான்-ஐஐடி மாணவர் ஆளுமை மாநாட்டை சென்னை ஐஐடி முதன்முதலாக நடத்தியது. மாணவர்களைத் திறம்பட வழிநடத்தவும், அவர்களின் வளாகங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தவும் தேவையான கருவிகள், நுண்ணறிவுகள், நெட்வொர்க்குகள் மூலம் மேம்படுத்தவும் இந்த மாநாடு வழிவகை செய்தது. மாணவர்களுக்கு தங்கள் கல்வி நிறுவனங்களுக்குள் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான செயல் உத்திகளை இந்த அமர்வுகள் அளித்தன" என தெரிவித்தார்.