திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கோஷ்டி மோதல் அடிக்கடி நடந்து வருகிறது. தற்போதைய நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தலைமையில் ஒரு கோஷ்டியும், மறைந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தலைமையிலான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் செயல்பட்டு வருகின்றனர்.
அண்மையில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் போலீசுக்கு சவால் விடும் வழக்காக இருந்து வருகிறது. அந்த வழக்கில் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய காங்கிரஸ் புள்ளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொருளாளருமான ரூபி மனோகரன், களக்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்காடுவெட்டி மற்றும் சிங்கிகுளம் ஊராட்சிகளில் மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மருத்துவ முகாம் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார்.
இதையும் படிங்க: 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்'.. புயலை கிளப்பும் திருமாவளவன்..! வீடியோ டெலிட் செய்ததால் பரபரப்பு!
அதனை அடுத்து, சிங்கிகுளம் ஊராட்சியில் நலத்திட்டம் வழங்கும் பணிகளை முடித்து விட்டு பிற்பகல் காடுவெட்டி ஊராட்சிக்கு ரூபி மனோகரன் சென்றபோது, களக்காடு வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அருணா தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் எப்படி களக்காடு வட்டாரத்தில் நிகழ்ச்சி நடத்தலாம்? எனக் கூறி ரூபி மனோகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், இரண்டு தரப்பு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடையில் கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டு இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் காரில் இருந்து இறங்காமலேயே அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.
அப்போது அவரது காரை அருணா தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் பின்னாலேயே துரத்திச் சென்றனர். உட்கட்சி பூசல் காரணமாக, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் சொந்த தொகுதியிலேயே சொந்த கட்சியினரால் விரட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.