ஈரோடு: ஈரோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் துணை பொதுச்செயலாளரும், நாமக்கல் எம்பியுமான சின்ராஜ் இன்று (பிப். 3) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய எம்பி சின்ராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கழகம் மாநாடு நாளை (பிப். 4) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி எதிர்கட்சிகள் டெல்லியில் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு கூட்டணி கட்சி என்ற முறையில் போராட்டத்தில் பங்கேற்பேன். சாயக் கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பலமுறை மத்திய மாநில அரசுகளிடம் எடுத்து கூறியதன் அடிப்படையில், அதற்கான குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. கழிவு நீர் வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
சாயச்சலவை கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய பொது சுத்தகரிப்பு மையம் அமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெருவாரியான விவசாயிகளின் கீழ் பவானி வாய்க்காலில் கான்கிரீட் போடக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் விவசாய விளை நிலங்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க கான்கிரீட் திட்டம் தேவையில்லை.
நாடாளுமன்ற பணிகளை கட்சி பாகுபாடுகளின்றி அனைத்து செயல்களையும் செய்து வருகிறேன். மீண்டும் போட்டியிடுவது குறித்து சொல்ல முடியாது. புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கட்சி தலைமை வலியுறுத்தி உள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீர்நிலைகளை சிறப்பாக பாதுகாக்கும் 100 பேருக்கு விருதுகளுடன் ரூ.1 லட்சம்.. அமைச்சர் மெய்யநாதன் தகவல்!