நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்து தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சி உள்ளது. இந்நிலையில், இந்த ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர் மகேஷ்வரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிக்கும் அரசியல் ரீதியாக முன்விரோதம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் கடந்த ஜூலை 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடந்த கிராம சபா கூட்டம், பொய்கைநல்லூர் ஊராட்சியில் மட்டும் சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி நடத்தப்படவில்லை. இதன் காரணமாக அந்த ஊராட்சியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பயனடைய முடியாமல் போராடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அதே சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி 100 நாள் வேலையையும் அதிகாரிகள் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (ஜூலை 18) பொய்கைநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகள் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரன் தலைமையில், “கலைஞர் கனவு இல்ல திட்டப் பணிகளை உடனடியாக தங்களது ஊராட்சியில் துவங்க வேண்டும், நூறுநாள் வேலைத் திட்டப் பணிகளைத் துவங்க வேண்டும், சிறப்பு கிராம சபா கூட்டத்தை விரைந்து நடத்த வேண்டும்” என்னும் கோரிக்கைகளை முன்னிறுத்தி மனுத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
ஆனால், மாவட்ட ஆட்சியர் பி ஆகாஷ் இன்று வராத காரணத்தால், நீண்ட நேரம் காத்திருந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர். அதனைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் தன்னிடம் இந்த மனுவைக் கொடுக்காதீர்கள், கூடுதல் ஆட்சியரிடம் கொடுங்கள் என கூறிவிட்டு வெளியேற்றியதாக தெரிவிக்கின்றனர். இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் காவல் நிலைய ஆய்வாளர் சதீஷ்குமார் கிராம மக்களிடம் சமாதானம் பேசிய பின், கூடுதல் ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், கூடுதல் ஆட்சியரும் இல்லாத காரணத்தால் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு குறித்து கூறியபோது, திங்கள்கிழமை முதல் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் அதிகாரிகள் தங்களிடம் அலட்சியமாக நடந்துகொள்கின்றனர். எனவே, இதுகுறித்து தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துவிட்டு திங்கட்கிழமைக்காக காத்திருப்பதாகக் கூறி அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரன், “எங்கள் ஊரில் 100 நாள் வேலை குறித்து அதிகாரிகள் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரியவில்லை. கிராம மக்கள் அனைவரும் வேலை செய்ய காத்திருக்கிறோம். ஆனால், அரசாங்கம் ஏன் வேலை தருவதில் அலட்சியமாக இருக்கிறது.
எப்போதும் எங்கள் ஊரில் சட்ட ஒழுங்கு பிரச்னை இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அப்படி இருக்க ஒரு காரணமும் இல்லை. எங்கள் ஊரில் 100 நாள் வேலை சம்பளத்தை வைத்து பலர் வாழ்வாதாரம் உள்ளது, இங்குள்ள பெண்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள். இதற்கு காரணம் எங்கள் ஊரில் எதிர் தரப்பில் இருப்பவர்கள், பணத்தை இடைமட்ட அதிகாரிகளுக்கு கொடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க பார்க்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தொழில்நுட்பம் அறியதாவர்களுக்கே இந்த திட்டம்.. அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேச்சு!