சென்னை: தமிழகத்தில் தொற்றா நோய்களின் (NCDs) அதிகரிப்பைத் தடுப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில், முதலில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தைத் தொடங்கப்பட்டு, வீடு வீடாகச் சென்று நோயாளிகளைக் கண்டறியவும், அவர்களுக்குத் தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் தொற்றாத நோய்களைக் கண்டறிதல், சிகிச்சை பின்னர் தொடர் கண்காணிப்பைச் செய்யவும் உடல் நலத்தை மேம்படுத்த உதவியாக இருந்தது.
மேலும் ஒரு மனிதனுக்குத் தொற்றாத நோய்களான சர்க்கரை, ரத்தக் கொதிப்பு போன்றவை வருவதற்கு முக்கிய காரணமாக, அவரின் உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பதே என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலகளவில் மரணம் அடைவதற்கான காரணங்களில் தொற்றாத நோய்கள் முக்கியமானதாக உள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள தகவல்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் குறைந்தபட்சம் 150-300 நிமிடங்கள் மிதமான முதல் தீவிரமான ஏரோபிக் உடற் பயிற்சி அல்லது 75-150 நிமிடம் தீவிரமான ஏரோபிக் உடற் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
உடற் பயிற்சி உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு தொடர்பான பிரச்சனைகளில் 27 சதவீதமும், இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் 30 சதவீதம் குறைக்க உதவியாக இருக்கும். தொடர்ந்து, உடலைச் சுறுசுறுப்பாக வைப்பதற்காகவும், உடல் எடையைச் சீராகப் பராமரிக்கவும், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உடற்பயிற்சி மிகவும் முக்கியமாகும்.
மக்களிடையே நடைப்பயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற திட்டத்தின் கீழ் ஹெல்த் வாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையின் கீழ் நவம்பர் 4 ம் தேதி அன்று நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை 38 வருவாய் மாவட்டத்திலும் துவக்கி வைத்தார். மேலும், ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்த திட்டத்தின் நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்கு மருத்துவ பரிசோதனையும், குடிநீர் வசதியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் குறிப்பாகத் தொற்றா நோய்களான நீரிழிவு, ரத்தக் கொதிப்பு மற்றும் இதய நோய்களின் தாக்கம் எதிர்காலங்களில் குறைக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரத்துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் பொதுச் சுகாதாரத்துறை கடந்த 4 மாதங்களில் ஆய்வு செய்துள்ளது. நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 24,310 நபர்கள் நடைப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களில் 19 ஆயிரத்து 910 நபர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பரிசோதனை செய்ததில், 13 ஆயிரத்து 063 நபர்களுக்கு எந்தநோய் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளனர். 5289 நபர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருந்தது, மீதம் உள்ள 1558 நபர்களுக்கு இந்த மருத்துவ முகாம் மூலம் புதிதாக ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பொதுச் சுகாதாரத்துறை மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “மனிதன் உடலை ஆரோக்கியமாக வைத்து இருப்பது தான் அனைத்து நோயில் இருந்தும் பாதுகாத்துக் கொள்வதற்கான தீர்வாகும். இதற்கு உடற்பயிற்சி முக்கியமாகும். நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்கள் இதனை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்.
இந்த திட்டத்தின் மூலம் பரிசோதனை செய்தவர்களில் சிலருக்கு அப்போது தான் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே மக்கள் அவ்வப்போது பரிசோதனை மேற்கொள்ளுவது மிகவும் முக்கியம். இந்த நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.