திருச்சி: நாம் தமிழர் கட்சி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்.25) திருச்சி வருகைதந்தார் அப்போது திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் நான் போட்டியிடப் போவதில்லை. கடந்த காலத்தில் என் முன்னோர்கள் செய்த தவறு எனக்குப் படிப்பினை. உதாரணமாக, மதிமுக பொதுச்செயலர் வைகோ நாடாளுமன்றத்தில் பேசியதை இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்து சட்டமன்றத்தில் பேசியிருந்தால் அவரை மிஞ்சிய தலைவர் யாரும் இருந்திருக்க முடியாது.
நாம் தமிழர் கட்சியில் ஜாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறேன். ஆதி தமிழ் குடிமக்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் அதைச் செய்கிறோம். தனித்தொகுதி என்பது இல்லை என்றால் இங்குத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பே இருக்காது. அரசியல் அதிகாரம், அங்கீகாரம் இல்லாமல் இருப்பவருக்கு நாங்கள் வாய்ப்பளிக்கிறோம். நிராகரிக்கப்பட்டவர்களை முன்னேற்றுவது தான் சமூக நீதி" என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, ராகுல் காந்தி ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கூறியது குறித்த கேள்விக்கு, "இத்தனை நாட்கள் ஆழ்நிலை தியானத்தில் கோமாவில் இருந்தாரா? நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து அரை நூற்றாண்டுக் காலம் ஆண்டது காங்கிரஸ் கட்சி. இவ்வளவு நாள் அவர் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? தேர்தல் வரும் பொழுதுதான் எங்கள்மீது பாசம் வருகிறது இவை அனைத்தும் நாடகங்கள்" என்று பதில் அளித்தார்.
இதனை அடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் விவகாரம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "பாசிசம் வீழட்டும் இந்தியா வாழட்டும் என்று மாநில உரிமைக்காக ஸ்டாலின் முழக்கமிடுகிறார். வாக்களித்துத் தேர்ந்தெடுத்த தமிழக மக்களை வாழ வைக்காமல் இந்திய மக்களை வாழ வைக்க ஸ்டாலின் கிளம்பிவிட்டார்.
எல்லையைத் தாண்டிச் சென்றால் பேராசைப்பட்டுச் செல்கிறார்கள் என்று சொன்னவர்தான் அவரது அப்பா. நான் ஆட்சியில் அமர்ந்த பின்பு மீனவர்கள் மீது முடிந்தால் யாராவது தொட்டுப் பார்க்கட்டும்" என்று கூறினார்.
விஜயதாரணி பாஜகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு, "காங்கிரஸ் கட்சி இனி இருக்காது அதனால் பாஜகவிற்குச் செல்லலாம் என்கிற நினைப்பில் விஜயதாரணி அங்குச் சென்று இருக்கலாம். காங்கிரஸ் கட்சியாவது அவருக்கு மூன்று முறை வாய்ப்பு வழங்கியது. ஆனால் பாஜக வை பொறுத்தவரை அந்தக் கட்சியில் சேரும் அன்று ஏதாவது செய்வார்கள் அதன் பின் எந்தச் செய்தியும் வராது" என்று பதிலளித்தார்.
மேலும் தொடர்ச்சியாகப் பேசிய அவர், "வாக்கு இயந்திரத்தை வைத்துத் தேர்தல் நடக்கும் போது முடிவு மக்கள் கையில் இருக்காது. பாஜகவினர் ஒரு கையில் நோட்டு பெட்டியும் மற்றொரு கையில் வாக்குப் பெட்டியும் வைத்துள்ளார்கள். அவர்கள் எத்தனை சீட்டு வெல்வோம் எனக் கூறுகிறார்களோ அத்தனையும் வெல்வார்கள்" என்று கூறினார்.
இதையும் படிங்க: கனமழையால் பாதித்த தென்மாவட்ட மக்களுக்கு ரூ.201.6 கோடி நிவாரணம் - அரசாணை வெளியீடு!