மதுரை: மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவர் நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைச்செயலாளராக உள்ளார். இந்தநிலையில் இன்று (ஜூலை 16) காலை வழக்கம் போல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே உள்ள வல்லபாய் சாலையில் பாலசுப்ரமணியன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவரை சூழ்ந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாலசுப்பிரமணியன் சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அதிகாலையில் நடைபெற்ற கொலை சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர் பாலசுப்ரமணியனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் உள்ள நிலையில் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இக்கொலை நிகழ்ந்துள்ளதால் சம்பவ இடத்தில் காவல்துறையினர் ஏராளமானோர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை நடந்த இடத்தில் வடக்கு காவல் துணை ஆணையர் மதுகுமாரி விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் பாலசுப்பிரமணியன் அரசியல் காரணங்களுக்காகக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் நிகழ்ந்த தலித் இளைஞர் படுகொலை சம்பவம்.. 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!