தூத்துக்குடி: தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நாம் இந்தியர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம், அக்கட்சியின் நிறுவனத் தலைவர் என்.பி.ராஜா தலைமையில், தூத்துக்குடியில் உள்ள விவிடி சிக்னல் அருகே புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் என்.பி.ராஜா பேசுகையில், "மத்திய அரசுக்கு கேஸ்(சமையல் எரிவாயு உருளை) என்பது மிகப்பெரிய பிசினஸ் ஆக உள்ளது. மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. இந்தியாவில் 80 சதவீதம் பேர் சமையல் எரிவாயு சிலிண்டர் உபயோகிக்கிறார்கள். இதனால் நமக்கு எதிர்ப்பு சக்தி குறைகிறது. தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியா முழுவதும் 547 எம்பிக்களில் நீங்கள் வெறும் 39 எம்பி இருக்கிறீர்கள், நீங்கள் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது.சமூக நீதி மதச்சார்பின்மை என்று பேசிக்கொண்டுச் செல்ல வேண்டியது தான். மோட்டார் வாகனச் சட்டம் ஒன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது. இதை எதிர்த்து 39 எம்பிக்களில் ஒருவராவது ராஜினாமா செய்தனரா? என விமர்சனங்களை முன்வைத்தார்.
அமைச்சர்கள் மீது விமர்சனம்: மேலும், மண் பானை தொழிலாளர்கள் ஒரு சட்டி செய்ய மண் எடுக்க முடியவில்லை, ஆனால் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு ஒரு யூனிட்டுக்கு 250 ரூபாய் கொடுத்தால் லாரி லாரியாக மணல் எடுத்துச்செல்லலாம் என்ற நிலை உள்ளது. தமிழக மக்களின் வயிற்றெரிச்சலால் தான் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார், மின் கட்டணத்தை அந்த அளவிற்கு உயர்த்தி மக்களை வாட்டி வதைத்தவர் செந்தில் பாலாஜி என திமுக நிர்வாகிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய ராஜா, தமிழகத்தில் தற்போது கஞ்சா அனைத்து பகுதிகளிலும் பரவி உள்ளது எனவும் இரவு 10 மணிக்கு மேல் தனியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக அரசு மகளிருக்கு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் ஒரு நாளைக்கு கூட போதுமானது அல்ல என்ற அவர், மக்களுக்கு தேவை இலவசம் அல்ல, வரியில்லா வாழ்க்கை தான் என்றார்.
கனிமொழி மீது விமர்சனம்: தூத்துக்குடி மக்களுக்கு நன்மை செய்ததை காட்டிலும் பல தவறான திட்டங்களை கொண்டு வந்தது தான் எம்.பி.,யின் சாதனை அவர் எப்படி மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்? என கனிமொழியை சீண்டிய ராஜா, அமைச்சராக உள்ள எனது சகோதரியை அடுத்த வருடம் மாற்றி விடுங்கள், புதிய நபர்கள் தான் எம்.எல்.ஏவாக வர வேண்டும் அப்போது தான் அந்த பதவிக்கு மதிப்பு இருக்கும் என்றார்.
ராகுல் காந்தி பிரதமர் என்று சொல்லி ஓட்டு கேட்டால், இந்தியா கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் என்ற அவர், மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால், வாழவே முடியாது எனவும் எத்தனை நவீன திட்டங்கள் மோடி கொண்டு வந்தாலும் சரி, தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது எனவும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: திமுக விருப்பமனு தாக்கல் நிறைவு.. இவ்வளவு பேர் போட்டியிட விருப்பமா?