புதுச்சேரி: கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மொத்தம் உள்ள 30 இடங்களில் என்.ஆர்.காங்கிரசுக்கு 10 இடங்களும், பாஜகவுக்கு 6 இடங்களும், சுயேச்சைகளுக்கு ஆறு இடங்களும் கிடைத்தன. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் திமுக ஆறு இடங்களையும், காங்கிரஸ் இரண்டு இடங்களையும் பெற்றன.
ஆனால், புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி தன்னிச்சையாக செயல்படுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், முதலமைச்சர் என்.ரங்கசாமி தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களை புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் சிலரும், பாஜக ஆதரவு சுயேச்சைகள் சிலரும் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஜெ.பி.நட்டாவை சந்தித்த அதிருப்தி எம்எல்ஏக்கள் அவரிடம் புகார் கடிதத்தை கொடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, “பாஜக எம்எல்ஏக்கள் கட்சித் தலைமையை சந்திப்பது அவர்களது விருப்பம். அவர்களுக்கு தேவையானதை கேட்கிறார்கள்” என்றார். தொடர்ந்து, கூட்டணி தர்மத்தை முதலமைச்சர் மீறிவிட்டதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளார்களே என்ற கேள்விக்கு, இதுவரைக்கும் அது மாதிரி தெரியவில்லை என பதிலளித்தார்.
மேலும், எதிர்கட்சிகளுக்கு நெருக்கமாக முதலமைச்சர் செயல்படுவதாக பாஜக கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, மக்களுக்கான, மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை அரசு செயல்படுத்தும். புதுச்சேரியை சிறந்த மாநிலமாக கொண்டு வர எல்லா திட்டங்களையும் அரசு செயல்படுத்தும் என தெரிவித்தார். தொடர்ந்து, பாஜக எம்எல்ஏக்களுக்கு வாரியத் தலைவர் வழங்கப்படும.? கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறும் என கூறியிருப்பது குறித்த கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிக்காமல் எழுந்து சென்றார்.
இதையும் படிங்க: “பிரதமரின் சர்வாதிகார போக்கினை நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” - நாராயணசாமி பேச்சு!