தூத்துக்குடி: முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர், லூர்து பிரான்சிஸ் சேவியர். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்ததாக ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
பின்னர், இவர்கள் மீது 57 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கொலை நடந்த 143வது நாளான அதே ஆண்டு செப்டம்பர் 15 அன்று குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் தீர்ப்பு வழங்கினார்.
இதனையடுத்து, இருவரும் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிவில் நீதிபதி தேர்வை அறிவித்தது. இதில் கொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் சேவியர் மகன் மார்ஷல் ஏசுவடியான், தனது தந்தை கொலை செய்யப்பட்ட சோகத்தில் இருந்து வந்த நிலையில், சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று, சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதனையடுத்து தேர்வில் வெற்றி பெற்ற மார்ஷல் ஏசுவடியான் வீட்டிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். அவருடன் தூத்துக்குடி பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் வாக்கரே அக்ஷய் அனில் மற்றும் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசுந்தர் ஆகியோரும் வாழ்த்தினர்.
இதையும் படிங்க: மோடி வெற்றி பெற்றால் இந்தியா ஒரு நாடாக இல்லாமல் போகும் - திமுக பொதுக்கூட்டத்தில் பொன் முத்துராமலிங்கம் பேச்சு!