கோயம்புத்தூர்: கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரது மகன் சோம்நாத் (24). சோம்நாத் சரிவர வேலைக்கு செல்லாமல் அவ்வப்போது தனியார் பேருந்து நடத்துநருக்கு உதவியாளராக செல்வார் என்றும், இவர் அதே பகுதியில் குடும்பத்துடன் வசிக்காமல் தனி வீட்டில் வசித்து வந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சோம்நாத் உடன் மதன் என்ற 47 வயதுடைய நபரும் தங்கி வசித்து வந்துள்ளதாகவும், மதன் அப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள கோயில் ஒன்றில் அடிக்கடி பூஜை செய்து வருபவர் எனவும் மாந்திரீகம் உள்ளிட்டவற்றில் ஈடுபாடு கொண்டவர் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (நவ.30) காலை சோமநாத்தின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அருகில் வசிக்கும் உறவினர்கள் வீட்டை திறந்து பார்க்கும் பொழுது சோம்நாத் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதனை அடுத்து உடனடியாக, காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இது சம்பந்தமாக விசாரணை நடத்தும் பொழுது, மதன் தான் சோம்நாத்துடன் தங்கியிருந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த மதனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: காதலியின் சகோதரரிடம் பேச்சுவார்த்தைக்கு சென்ற காதலன் வெட்டி படுகொலை...நெல்லையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
மேலும் சம்பவ இடத்தில், கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அவரது முதற்கட்ட விசாரணையில், "மதனே குடிபோதையில் சோம்நாத்தை கல்லால் தாக்கி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், அடுத்தடுத்து விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, சோம்நாத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தொடர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ச்சியாக போலீசார் நடத்திய விசாரணையில், "மதன் தினமும் இரவு நேரத்தில் அதிக சத்தத்துடன் ரேடியோவில் பாடல் கேட்பதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும், இதனால் அக்கம்பக்கத்தினர், சோம்நாத்திடம் பல முறை தெரிவித்து மதனை காலி செய்ய செல்லும் படி கூறியதாக சோம்நாத் மதனிடம் கூறியதாகவும் இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
மேலும், இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (நவ.29) சோம்நாத் ரேடியோவை எடுத்து ஒளித்து வைத்துள்ளார். இரவு மதன் மது அருந்தி விட்டு வந்த போது ரேடியோ இல்லாததால் சோம்நாத்திடம் கேட்டு சண்டையிட்டுள்ளார்.
அதன் பின்னர், மதன் வெளியே சென்று விட்டு திரும்பி வந்த போது சோம்நாத் உறங்கி கொண்டு இருந்த போது ஆத்திரத்திலும் மது போதையிலும் இருந்த மதன் வீட்டிற்கு வெளியில் கிடந்த கல்லை கொண்டு சோம்நாத்தின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து, சிறிது நேரம் கழித்து பரிகாரம் செய்கிறேன் என வீட்டிற்குள்ளேயே பூஜை பொருட்களை கொண்டு பரிகாரம் செய்துள்ளார். பின்னர், வீட்டின் கதவை மூடிவிட்டு வெளியே சென்று, அப்பகுதியிலேயே சுற்றித் திரிந்து வந்ததாக காவல்துறையினரிடம் மதன் தெரிவித்துள்ளார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதன் போலீசாரிடம் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில், தற்போது மதன் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.