சென்னை: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த விகாஷ் என்பவரின் காலில் வெட்டிய வழக்கில், 'தக்காளி' பாரத் என்பவர் கைதாகி ஜாமீனில் வெளிவந்தார். இதற்குப் பழிவாங்க நோக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம், விகாஷின் சகோதரரான பார்த்திபன் என்பவர் தனது நண்பர்கள் கணேசன், தேவராஜ், தீபக்குமார் ஆகியோருடன் சேர்ந்து,பாரத்தைக் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாரத், சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நால்வரும் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கின் விசாரணை சென்னை சென்ட்ரல் அருகே அல்லிக்குளம் வணிக வளாகத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்ட 21வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்,நீதிபதி S.T.லட்சுமி ரமேஷ் முன்பு விசாரணை நடைபெற்றபோது, காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் P.சுரேஷ் ஆஜரானார்.
இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி தனது தீர்ப்பில், குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நால்வருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: “கடவுள்தான் கொளுத்த சொன்னார்”.. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தீ வைத்த நபரின் திடுக்கிடும் பதில்கள்!