திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் கூறுகையில், "திருவண்ணாமலைக்கு பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநில பக்தர்களும் அதிகளவில் வருகின்றனர்.
கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கான குடிநீர், கழிப்பறை வசதியை அதிகரிக்க வேண்டும். பவுர்ணமிக்கு மட்டும் கழிப்பறைகளைத் திறந்து வைக்கின்றனர். அனைத்து நாட்களிலும் திறந்து வைத்திருக்க வேண்டும். தடையின்றி குடிநீர், தங்கும் வசதி, அன்னதானம் உள்ளிட்டவையும் வழங்க வேண்டும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவதற்கு கோயில் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இது போன்ற கட்டிடங்கள் கட்டுவதை தமிழக அரசு கைவிட வேண்டும். திமுக அரசு ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளதாக பெருமையாக பேசிக் கொள்கிறது.
பக்தர்களின் காணிக்கை மற்றும் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒரு கோயில் கும்பாபிஷேகத்தையும் தமிழக அரசு நடத்தவில்லை. திமுக அரசின் பட்ஜெட்டில் குறிப்பிட்ட திட்டங்களை அறிவிக்காமல் மத்திய அரசின் திட்டங்களை குறை கூறி வருகின்றனர். மத்திய பட்ஜெட் தொலைநோக்கு பார்வையுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில வாரியாக பட்ஜெட் ஒதுக்கப்படவில்லை.
மாறாக ரயில்வே துறை, வேளாண் துறை உள்ளிட்ட துறைகள் ரீதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தில் தொழில் தொடங்கியவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம். இத்திட்டத்தில் வழங்கப்படும் கடன் ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழர்கள் அதிகம் பயனடைவார்கள். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை திராவிட மாடல் ஆட்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர் என்றார். மேலும், தமிழகத்தில் பால் விலை, மின்சார கட்டணம், சொத்து வரி, பத்திரப் பதிவு கட்டணத்தை திராவிட மாடல் அரசு உயர்த்தி உள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பட்டியலின மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு மோடி அரசு என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரிவர செய்து வருகிறது.
இருப்பினும், அரசியல் ஆதாயத்திற்காக மோடி அரசை விமர்சனம் செய்வதை குறிக்கோளாக வைத்துள்ளது திமுக. அந்த கட்சியில் மூத்த அமைச்சர்கள் பலர் இருந்தாலும், அவர்கள் ஜூனியர் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். துணை முதல்வர் பதவிக்கு கோபாலபுரம் சேர்ந்தவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிப்பார்கள்.
அக்கட்சியைச் சேர்ந்த அடிமட்ட தொண்டர்களுக்குக்கோ அல்லது மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க மாட்டார்கள். இது மட்டுமல்லாமல் உதயநிதியை விடக் கனிமொழி மூத்தவர்தான் ஆனால் அவரை துணை முதல்வராக நியமிக்கக் கூட திமுக குடும்பம் தயாராக இல்லை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாலியல் தொழிலில் சிறுமி.. கஸ்டமராக சென்ற கோயில் பூசாரி! சகோதரி உட்பட 6 பேர் கைது!