சென்னை: தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொதுச்செயலாளர் சுபின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை அலுவலகம் 2024 அக்டோபர் 2ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023-ன் அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் (Staff Nurse) பணியிடங்களை நிரப்பும் விதமாக பதவி உயர்வுக்கு தகுதியான நகர்ப்புற சுகாதார செவிலியர்களின் பணி விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் துணை செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மற்றும் மகப்பேறு உதவியாளர் ஆகிய 18 முதல் 24 மாத கால பயிற்சிகள் முடித்த ஊழியர்களுக்கு பணி செவிலியராக பதவி உயர்வு வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனைகளில் செவிலியராக பணி செய்ய வேண்டும் என்றால் ஒருவர் மூன்றரை வருட டி.ஜி.என்.எம் பட்டயப் படிப்பு அல்லது 4 வருட பி.எஸ்.சி நர்சிங் பட்டப் படிப்பு அல்லது அதற்கு மேல் உள்ள படிப்புகளை இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் படித்திருப்பதுடன், மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
அவ்வாறு பதிவு பெற்றால் மட்டுமே அவர் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணி செய்ய முடியும் என்பது விதி. ஆனால் அந்த விதிகளை மீறி பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மருத்துவமனைகளில் செவிலியர் கல்வித் தகுதியே இல்லாத துணை செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மற்றும் மகப்பேறு உதவியாளர் போன்ற ஊழியர்களை கொண்டு நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அடிப்படை விதிகளை மீறும் நடவடிக்கையாகும்.
செவிலியருக்கான கல்வித் தகுதி இல்லாதவர்களை செவிலியர் பணியில் அமர்த்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையில் குறைபாடுகள் ஏற்படுவதுடன் நோயாளிகளுக்கு அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். கல்வி மற்றும் சுகாதாரத்தில் நாட்டின் முன்னோடியாக திகழும் தமிழ்நாட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி நோயாளிகளின் நலனைக் குறித்து சிறிதும் அக்கறையின்றி இது போன்று பணியமர்வுகளை செய்வது வேதனையளிக்கிறது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பணிகள் தேர்வாணையத்தின் போட்டி தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட (இரண்டு வருடத்தில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற பணி நியமன ஆணை வழங்கப்பட்டு) செவிலியருக்கான கல்வித் தகுதியுடன் தொகுப்பூதியத்தில் பல்லாயிரம் செவிலியர்கள் பணி செய்து வருகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதியில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் 9 ஆண்டுகளாக தொகுப்பூதிய முறையில் பணி செய்யும் செவிலியர்களை அந்த காலி பணியிடங்களில் பணியமர்த்துவதைத் தவிர்த்து, செவிலியர் பணிக்கான கல்வித் தகுதியே இல்லாத நபர்களைக் கொண்டு நிரப்புவது அதிர்ச்சியளிக்கிறது.
ஆகவே பெருநகர சென்னை மாநகராட்சி செவிலியருக்கான கல்வித் தகுதி இல்லாத ஊழியர்களை கொண்டு நிரப்புவதை கைவிடுவதுடன், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 மாற்றியமைத்து மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் தற்போது பணியில் இருக்கும் தொகுப்பூதிய செவிலியர்களை கொண்டு அந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்