திருச்சி: திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதளப் பாதை விரிவாக்கப் பணிகள் மற்றும் பயணிகள் வசதி குறித்து, திருச்சி மாவட்ட ஆட்சியருடன் எம்பி துரை வைகோ இன்று (ஆக.19) ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி, "இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர், விமான நிலைய இயக்குனர், வருவாய் அலுவலர் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், திருச்சி விமான நிலைய ஓடுதளப் பாதை விரிவாக்கம் குறித்தும், பயணிகளுக்குச் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் பேசப்பட்டது.
திருச்சியில் புதிய விமான நிலைய முனையம் கட்டப்பட்டு ஜூன் 11ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால், பெரிய விமானங்கள் தரையிரங்கும் அளவிற்கு ஓடுதளப் பாதை இன்னும் விரிவுப்படுத்தப்படவில்லை. ஓடுதளப் பாதையை விரிவுப்படுத்தினால் தான் கூடுதல் விமானங்கள் மற்றும் பெரிய விமானங்கள் இயக்கப்பட முடியும். பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஓடுதளப் பாதைக்கான நிலத்தை கையகப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நாளை ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதளப் பாதை விரிவாக்கப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவருடன் ஆலோசனை..!
— Durai Vaiko (@duraivaikooffl) August 19, 2024
திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதளப் பாதை விரிவாக்கப் பணிகள் மற்றும் பயணிகள் வசதி குறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருடன் இன்று (19.08.2024) நடைபெற்ற கூட்டத்தில்… pic.twitter.com/qiRlHOGhpl
விமான நிலையங்களுக்கு பயணிகளோடு வருகை தருபவர்களின் பயன்பாட்டிற்காக தற்போது ஒரே இடத்தில் தான் கழிப்பறை வசதி உள்ளது. எனவே, வருகை (arrival) மற்றும் புறப்பாடு (departure) ஆகிய இரண்டு பகுதிகளிலும் பயணிகளோடு வருபவர்களின் பயன்பாட்டிற்காக கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் கேட்டுக் கொண்டேன்.
பொதுவாக விமான நிலையங்களில் பாதுகாப்பு கருதி ஆட்டோக்களை உள்ளே அனுமதிப்பது இல்லை. ஆனால், ஆட்டோவில் வருபவர்கள் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் இருந்து விமான நிலைய முனையத்திற்குச் செல்ல ஒன்னே முக்கால் கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.
ஆகவே, பயணிகளின் நலன் கருதி, விமான நிலையத்தில் எவ்வளவு தூரம் ஆட்டோக்களை முனையத்திற்கு நெருக்கமாக அனுமதிக்க முடியுமோ, அந்த இடத்தில் ஒரு ஆட்டோ நிறுத்துமிடம் (Drop Center) அமைத்து பயணிகளுக்கு உதவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன்.
முதல் கூட்டத்தில் நான் வைத்த கோரிக்கையோடு, விமான சேவையைப் பயன்படுத்துவோரின் கோரிக்கையையும் ஏற்று, தற்போது தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் திருச்சி விமான நிலையத்திற்கு மூன்று வேளை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வசதியைப் பொறுத்து, பேருந்துகளின் எண்ணிக்கை வருங்காலங்களில் கூடுதலாக்கப்படும்.
பயணிகளின் வசதிக்காக விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு நுழைவாயிலில் இருந்து திருச்சி - புதுக்கோட்டை பிரதான சாலை வரை விமான நிலைய நிர்வாகத்தின் சார்பில் பயணிகள் அமர்ந்து செல்லும் பேட்டரி கார் போன்ற இலவச ஊர்திகளை (Shuttle service) இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன். இந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளையும், ஆலோசனைகளையும் பரிமாறிக் கொண்டோம்" என தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுக துணை பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: 28க்கும் மேற்பட்ட வழக்குகள்.. பிரபல ரவுடி செல்வத்தை சுட்டுப் பிடித்த குமரி போலீசார்! - Police shot rowdy Selvam