சென்னை: கத்தரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கவுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் வெயில் மற்றும் வெப்ப அலையின் தாக்கம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த சில வாரங்களாக கொளுத்தி எடுக்கும் சாதாரண வெயிலையே தாக்குப் பிடிக்க முடியாமல் மக்கள் திணறி வரும் நிலையில், நாளை முதல் (04-05-2024) அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ளது.
இது வரும் 29ஆம் தேதி அதாவது ஒட்டுமொத்தமாக சுமார் 26 நாட்களுக்கு இருக்கும் எனவும், வழக்கத்தை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ள நிலையில், அதிகபட்சமாகக் கரூர் மாவட்டத்தில் 112 டிகிரி வெப்பம் பதிவாகி இருக்கிறது. இனி வரும் நாட்களில் இதைவிட அதிகமாக வெப்பம் பதிவாகும் எனவும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?: சூரிய வட்டப்பாதையில் சந்திரன், பூமி உள்ளிட்ட அத்தனை கிரகங்களும் பயணிக்கிறது. அந்த பயணத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாத கடைசி மற்றும் மே மாத ஆரம்பத்தில் பூமியும் சூரியனின் மிக அருகாமையில் பயணிக்கும். அப்போதுதான் அந்த வெப்பம் அதிக அளவில் காணப்படுகிறது.
சாதாரணமாகவே அக்னி நட்சத்திர நாட்களில் வெயில் மற்றும் வெக்கையின் தாக்கம் அதிகமாக இருக்கும், இதற்கு இடையில் காலநிலை மாற்றமும் சேர்ந்துள்ளதால் பூமி அனல் பந்துபோல் மாறி இருக்கிறது.இதனால் இந்த வெப்பத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் மக்கள் அல்லாடி வருகின்றனர்.
அக்னி வெயிலில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி?:
- முடிந்தவரை வெயில் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிருங்கள்
- நீராகாரமான உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்
- பருத்தி துணியாலான ஆடைகளை, அதுவும் மிகத் தளர்வாக அணியுங்கள்
- பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள்
- வெளியே செல்லும்போது கையில், குடை, தண்ணீர் பாட்டில், ஓஆர்எஸ், கட்டாயம் வைத்துக்கொள்ளுங்கள்
- கண்களுக்கு கூலர் அணிந்து வெளியே செல்லுங்கள்
- குழந்தைகளை வெளியே சென்று விளையாட அனுமதிக்க வேண்டாம்
- சாதாரணமாகக் குடித்த தண்ணீரை விட அதிகம் தண்ணீர் குடியுங்கள்
- காலை மற்றும் மாலை என இருவேளையும் குளியுங்கள்
- உடலுக்குச் சூடு ஏற்படுத்தும் உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்
- வீட்டில் உள்ள தாவரங்களுக்கு மாலை நேரங்களில் தண்ணீர் ஊற்றி செழிப்பாக வைத்துக்கொள்ளுங்கள்
- வீடுகளுக்கு உள்ளே செடிகளை வைத்துப் பராமரியுங்கள்
- வெயில் நேரத்தில் வீட்டின் கதவு, ஜன்னல் ஆகியவை சாத்தி வையுங்கள் மற்றும் காலை, மாலை திறந்து வையுங்கள்
இதுபோன்ற சில வழி காட்டுதல்களை நீங்கள் பின்பற்றுவதன் மூலம், முடிந்த வரை இந்த வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள முடியும்.
இதையும் படிங்க: LIVE: நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்.. வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர் சந்திப்பு! - AGNI NAKSHATRAM 2024