சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று (பிப்.22) காலை ஃப்ளை துபாய் ஏர்லைன்ஸ் (Fly Dubai Airlines) பயணிகள் விமானம் துபாய் புறப்படத் தயாரானது. இதற்கிடையே, அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ரோஜா (40) என்ற பெண், சுற்றுலாப் பயணி விசாவில் துபாய் செல்வதற்காக வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்ததை அடுத்து, அவரை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து, அதிகாரிகள் அவருடைய கைப்பையை சோதித்துள்ளனர். அப்போது, அந்த பெண் பயணியின் கைப்பைக்குள் இருந்த பார்சலில் 68 சிம் கார்டுகள் இருந்ததைக் கண்டு, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவை அனைத்தும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனத்துடையது என்பதும், அந்த சிம் கார்டுகள் ஆக்டிவேஷன் செய்யப்படாமல் புதிதாக இருந்ததும் சோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த சிம் கார்டுகள் கவர்களுடன் இருந்தால் பார்சல் பெரிதாகத் தெரிந்து, சுங்கச் சோதனையில் கண்டுபிடித்து விடுவார்கள் எனக் கருதி, அனைத்து சிம் கார்டுகளும் கவர்களில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்தப் பெண் பயணியை தனியே அழைத்து, பெண் சுங்க அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போதும் அந்தப் பெண் முன்னுக்குப் பின் முரணாகவே பதில் கூறியுள்ளார். அதில் அவர், "இந்த சிம் கார்டுகளுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் சென்னை விமான நிலையத்தில் வந்து நின்றபோது, ஒருவர் வந்து இந்த பார்சலை எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறினார்.
துபாய் விமான நிலையத்தில் ஒரு பெண், உங்களிடம் இந்த பார்சலை வாங்கிக் கொள்வார். இந்த பார்சலில் மருந்துப் பொருட்கள் இருக்கிறது என்றார். ஆகையால் நான் பார்சலை வாங்கினேன்" என்று கூறினார். இதையடுத்து, விமான நிலையத்தின் எந்த இடத்தில் இந்த பார்சலைக் கொடுத்தார்கள்? யார் கொடுத்தது? எத்தனை மணிக்கு கொடுத்தார்கள்? எத்தனை பேர் வந்து கொடுத்தார்கள்? என சுங்க அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு குழப்பமாக பதில் கூறியுள்ளார்.
அதோடு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்தப் பெண் கூறியபடி எவரும் வந்து பார்சலைக் கொடுத்தது போல் தெரியாததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, சுங்க அதிகாரிகள் ஆந்திர பெண் பயணி ரோஜாவின் துபாய் பயணத்தை ரத்து செய்தனர். அது மட்டுமல்லாமல், அவர் வைத்திருந்த 68 சிம்கார்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, இந்த சிம் கார்டுகள் வெளிநாடுகளில் இருந்து வரும் கடத்தல் ஆசாமிகள், போலி பாஸ்போர்ட்கள் தயார் செய்பவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் பயன்படுத்துவதற்காக எடுத்துச் செல்லப்படுகிறதா என்ற சந்தேகத்தின் அடைப்படையில், பெண் பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதையடுத்து, அவர் சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
தற்போது சென்னை விமான நிலைய போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போலீசாருக்கும் இதுகுறித்து தகவல் கொடுத்து, அந்த பெண் பயணியின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் போதைப்பொருள் பதுக்கலா? - போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிரடி சோதனை!