தருமபுரி: பாலக்கோடு அருகே கோடியூர் என்ற இடத்தில் நேற்று இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பாலக்கோட்டிலிருந்து மாரண்டஅள்ளிக்கு சென்ற தனியார் பேருந்தும், ஓசூரிலிருந்து தருமபுரிக்கு பயணிகளுடன் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்து மாலை நேரத்தில் நடந்ததால் பேருந்துகளில், பள்ளி விட்டுச் சென்ற மாணவர்களும், பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களும் நிரம்பியிருந்தனர். விபத்தில் 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோருக்குக் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்கள் பாலக்கோடு மருத்துவமனை மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். பாலக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களை முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி.அன்பழகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். மேலும் உயர்தர சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினர்.
இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய பெண்.. முதலுதவி செய்த மருத்துவருக்கு குவியும் பாராட்டு!