சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும், கல்விக்காக பல்வேறு மாணவர்கள் மற்றும் வேலை செய்யும் இளைஞர் என பலரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகையைக் கொண்டாடுவதற்காக அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில், சென்னையிலிருந்து 29ஆம் தேதி 12 மணி வரையில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் 3,41,844 பேர் பயணம் செய்துள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களும் சேர்த்து 11,176 பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வழித்தடங்கள்: கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT) கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம்,
அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாகப் பட்டுக்கோட்டை, மன்னார்குடி செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது.
கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், திருவாரூர் மற்றும் திருத்துறைபூண்டி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், சென்னையில் வசிப்பவர்கள் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் மாற்றப்பாதையில் இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், தாம்பரத்திலிருந்து போக்குவரத்து நெரிசல் இருப்பதாகல் பொதுமக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் நேற்று முன்தினம் (அக்.28) நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2092 பேருந்துகளும் 369 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு, 2461 பேருந்துகளில் 1,10,475 பயணிகள் பயணித்துள்ளனர்.
அதேபோல் நேற்று (அக்.29) நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளும், 1,967 சிறப்பு பேருந்துகளும் என 4,059 பேருந்துகளில் 2,31,363 பயணிகள் என தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு 3,41,844 பேர் பேருந்துகளில் சென்றுள்ளனர். மேலும், தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக இன்று காலையில் மட்டுமே பள்ளி, கல்லூரிகள் இயக்கும் எனவும், மாலையில் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மதியம் முதல் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்