நீலகிரி: கூடலூரில் உள்ள கம்மாத்தி பகுதியில் வசித்து வரும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான ஏ.ஜே.தாமஸ் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய தீவிர சோதனையில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், பணப் பட்டுவாடா நடைபெறுவதைத் தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்படப் பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், நீலகிரி மாவட்டம் கூடலூர் கம்மாத்தி பகுதியில் வசித்து வரும் தமிழ்நாடு வணிகர் சங்க மாநில துணைத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான ஏ.ஜே.தாமஸ் வீட்டில் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் அவரது வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மாலை துவங்கிய இந்த சோதனையானது கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்துள்ளது. இந்த சோதனையில் வருமான வரி மற்றும் சொத்து உள்ளிட்ட விபரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தற்போது கூடலூரில் உள்ள அவரது வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் செலவினத்திற்காக இப்பணம் பதுக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.