திருப்பத்தூர்: சமீப காலமாகவே இணைய வழி மோசடி என்பது அதிகரித்து வருகின்றது. வங்கியில் இருந்து பேசுகிறோம் என்பதில் தொடங்கி, பரிசுத் தொகை விழுந்துள்ளது என்பது வரை புதுப் புது வழிகளில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்கள் பணத்தைக் கரந்து வருகின்றன.
இந்த மோசடியில் இருந்து மக்களைக் காக்க விழிப்புணர்வு, அறிவுரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தாலும், சில நூதன யுக்திகளைக் கையாண்டு மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதில் ஒரு அடி முன் உள்ளன இந்த மோசடி கும்பல்கள். மேலும், மக்களிடம் இணைய வழியிலான பணப்புழக்கம் அதிகரித்து விட்டதால், மோசடி கும்பல்களும் தங்கள் கவனத்தை இணைய பக்கம் திருப்பி, புது வழிகளில் திருட ஆரம்பித்து விட்டன.
இது ஒருபுறம் இருக்க, இணைய வழி பணப் பரிமாற்றம் குறித்த மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, சில பண மோசடிகள் அரங்கேறி வருகின்றது. அந்த வகையில், பணத்தை கையில் வாங்கிக் கொண்டு கூகுஸ் பே, பேடிஎம் போன்றவற்றில் செலுத்துவதாகக் கூறி, போலியான மெசேஜினைக் காட்டி ஏமாற்றும் கும்பல் குறித்த சில புகார்கள் எழுந்து வருவதைத் தற்போது காண முடிகிறது. இதில் கடைக்காரர்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பார்சல் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் சேகர். இவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு, கிப்ட் கார்னர் என்ற பெயரில் பேன்சி ஸ்டோர்ஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 8) இரவு 9:43 மணியளவில் சேகரின் கடைக்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், 165 ரூபாய்க்கு கடையில் சாக்லேட் வாங்கியுள்ளனர்.
பின்னர், 600 ரூபாயை தொலைபேசி எண் மூலம் வங்கிக் கணக்கில் போடுகிறோம், கையில் பணத்தைக் தாருங்கள் எனக் கடைக்காரரிடம் கூறியதாகத் தெரிகிறது. இதற்கு சேகர் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவரின் தொலைபேசிக்கு சாக்லேட் வாங்கிய தொகை மற்றும் 600 ரூபாய் சேர்த்து 765 ரூபாய் ரிசீவ்டு ஆனதாக மெசேஜ் வந்துள்ளது. இதனை நம்பிய சேகரும், அக்கவுண்டை சோதனை செய்து பார்க்காமல், அவர்களிடம் 600 ரூபாயைக் கொடுத்துள்ளார்.
பின்னர், மறுநாள் அக்கவுண்டை சரிபார்த்த போது, அதில் பணம் இல்லாததைக் கண்டு சேகர் அதிர்ச்சி அடைந்துள்ளார். தற்போது இது தொடர்பாக, பணம் பெறப்பட்டதாக வந்த மெசேஜ் நகல் மற்றும் அந்த தொலைபேசி எண் ஆகியவற்றை இணைத்து, திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், இதுபோன்று ஏமாற்றும் நபர்களிடமிருந்து கடைக்காரர்கள் உஷாராக இருக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் தொழிலாளி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. மகனே தந்தையை கொல்ல காரணம் என்ன?