திருப்பத்தூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், வேலூர் மாநகருக்கு உட்பட்ட விருபாட்சிபுரம், பாகாயம், அணைகட்டு தொகுதிக்கு உட்பட்ட சித்தேரி, அரியூர், பெண்ணாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய வேட்பாளர் கதிர் ஆனந்த், மத்தியில் ஆளும் மோடி அரசு, கேஸ் விலையையையும், பெட்ரோல் டீசல் விலையையும் பல மடங்கு உயர்த்தியதாகவும், ஆட்சிக்கு மீண்டும் வந்தால் ரூ.2,000 ரூபாய் அளவிற்கு கேஸ் விலையை மோடி உயர்த்த உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
அதேபோல, ஏழை எளிய மக்கள் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத அளவிற்கு தங்கம் வெள்ளி விலையையும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், இதற்கு காரணம் மோடி அரசு தான் எனவும் மேலும் குற்றம்சாட்டினார்.
மேலும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், விலையை குறைத்து நல்லாட்சியை நடத்துவதற்கு மத்தியிலே இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும், தமிழ்நாட்டில் உதயசூரியன் வெற்றி பெற உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும், மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்கு சேகரித்தார்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், மத்தியில் நல்லாட்சியை அமைக்கவும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு, தமிழ்நாட்டில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி ஆலங்காயம் ஒன்றியம் பீமகுளம், காவலூர், ஆலங்காயம், நிம்மியம்பட்டு, வெள்ளகுட்டை, கொத்தகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெண்களை பிரச்சாரக் கூட்டத்திற்கு ரூ.200 வீதம் பணம் கொடுத்து அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதேபோல, திமுகவின் கொடிகளை கைகளில் பிடித்தபடி பள்ளி மாணவர்கள் அபாயமான முறையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறுகின்றனர். எனவே, இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கோவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் காரை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை! - Minister TRB Rajaa